திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காளிவேலம்பட்டி பகுதியில், திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டதைத் தொடந்து, ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள மால் அருகே பொதுமக்கள் சென்று பார்த்தபோது ஒரு காரில் சில இளைஞர்கள் அதி வேகத்துடன் சாலையில் பயங்கர சத்தத்துடன் இயக்கிக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டனர்.
இது குறித்து பல்லடம் காவல் ஆய்வாளர் மாதைய்யன்னுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வாளர் காரை பறிமுதல் செய்து அங்கிருந்த வாலிபர்களை பல்லடம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், காரை அதிவேகத்தில் ஓட்டி சைலன்சரை மாற்றி அதிக சத்தத்துடன் ஓட்டியது தெரிய வந்தது. மேலும் பிடிபட்ட அனைவரும் பல்லடம் பகுதியை சேர்ந்த பட்டதாரி வாலிபர்கள் என்பதால் ஆய்வாளர் மாதையன் எச்சரிக்கை செய்து அனுப்பினார்.

இந்நிலையில் பிடிபட்ட இளைஞர்கள் ஆய்வாளரிடம் கூறும் போது, இன்றைக்கு நான் இங்க நிக்கிறது பெருமைக்காக இல்லை. வெட்கத்தோட நிக்கிறேன்.நேற்று நான் என் காரோட சைலன்சரை மாத்தி, ரொம்ப அதிக சத்தத்தோட தெருவுல ஓட்டிட்டு வந்தேன். போலீஸ் என்னை பிடிச்சாங்க, முதல்ல நான் இதை ஸ்டைல்னு நினைச்சேன். என் நண்பர்கள் எல்லாம் சூப்பரா இருக்குனு சொன்னாங்க. அதனால தான் செஞ்சேன்.
ஆனால் இன்றைக்கு இன்ஸ்பெக்டர் சொன்னதுக்கு அப்புறம்தான் எனக்கு புரிந்தது, நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன். நான் ஒரு பொறியாளர். சைலன்சர் எதுக்குனு எனக்கு தெரியும். சத்தத்தை குறைக்கிறதுக்கு தான். ஆனா நானே அதை மாத்தி சத்தத்தை அதிகமாக்கி இருக்கிறேன். இது நான் படிச்ச படிப்புக்கே அவமானம்.

என் கார் சத்தத்தால், தெருவுல ஒரு வயசான அம்மா பயந்திருப்பார். ஒரு குழந்தை அழுதிருக்கும். ஒரு நோயாளி கஷ்டப்பட்டிருப்பார். ஒரு படிக்கிற பிள்ளை கவனம் சிதறியிருக்கும். இதெல்லாம் யோசிக்காம நான் தவறு செய்துவிட்டேன். அதுக்காக நான் எல்லோர்ரிடமும் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்றேன். என்னை மன்னித்துவிடுங்கள், நீங்க என் மேல வழக்கு போடாம, எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி. என் அப்பா, அம்மா கஷ்டப்பட்டு என்னை படிக்க வச்சாங்க. இந்த வழக்கினால் அவங்க பேரு கெட்டு போயிடும்னு பயந்துட்டேன். நான் இப்போ சத்தியம் பண்றேன்.
இன்றைக்கே என் காரில் மாற்றப்பட்ட சைலன்சரை கழட்டிட்டு, ஒரிஜினல் சைலன்சரை மாட்டிடுவேன். இனிமே ஒரு நாளும் அதிக சத்தத்தோட கார் ஓட்ட மாட்டேன். என் நண்பர்கள் யாராவது இப்படி செய்தால் கூட, நானே அவங்களுக்கு எடுத்து சொல்லி மாத்த வைப்பேன். பொறியாளர்-னா சத்தத்தை அதிகமாக்குறவன் இல்லை. சத்தத்தை குறைக்கிறவன் தான்னு இன்னைக்கு புரிஞ்சுகிட்டேன் என உறுதியளித்ததால், என்னை மன்னிச்சு, இன்னொரு வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
- நமது நிருபர்




































































































