தீபாவளி திருநாளில் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினருடன் சந்தோஷமாக பொழுதைக் கழிக்கும் நேரத்தில், தான் மட்டும் சந்தோஷமாக இருப்பதைவிட குடும்ப உறவுகளால் புறக்கணிக்கப்பட்டு முதியோர் இல்லங்களில் தங்கியிருப்பவர்களையும் சந்தோஷப்படுத்தும் வகையில், காவல்துறையினர் செயல்பட்ட விதம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தீபாவளியன்று சென்னை மயிலாப்பூர் E-1 காவல்நிலைய ஆய்வாளர் எம் ரவி தலைமையில், காவல்துறையினர் மந்தைவெளியில் உள்ள ரெஜினா அறக்கட்டளை மூலம் பராமரிக்கப்பட்டு வரும் முப்பது முதியவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்றுள்ளனர். அங்குள்ள முதியவர்களுக்கு போர்வை, இனிப்புகள் வழங்கி அவர்களுடன் வாழ்த்துக்களை பரிமாறி தீபாவளியை கொண்டாடியுள்ளனர்.

காவல்துறையினரை கடுமையானவர்கள், கல் நெஞ்சம் படைத்தவர்கள் என பொதுமக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுவதுண்டு. ஆனாலும் கடுமையான பணிச்சுமைகளுக்கு மத்தியில், முப்பது ஆதரவற்றோரை மனிதநேயத்துடன் நேசித்து, அவர்களுடன் தீபாவளியை கொண்டாடிய மனிதநேய பண்பாளர் மயிலாப்பூர் காவல்நிலைய ஆய்வாளர் எம் ரவிக்கு அப்பகுதியினர் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.




































































































