திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட பல்லடம் நகராட்சி 18 வார்டுகளை உள்ளடக்கிய நகரமாகும். மேலும் கோவையில் இருந்து தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கும், கரூர் திருச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல பிரதான வழித்தடமாக உள்ளது. கோவை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பல்லடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

மேலும் கோவைக்கு வெளியூரில் இருந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் நோயாளிகள் மேல்சிகிச்சைக்காக நூற்றுக்கணக்கான ஆம்புலென்ஸ் பல்லடத்தை கடந்து செல்கின்றன. மேலும் பல்லடத்தில் கட்டப்பட்டுள்ள பெரும்பாலான கட்டிடங்கள் பெயரளவிற்கு கட்டிட அனுமதி பெற்று விதி மீறி கட்டப்பட்டுள்ளன.

மேலும் நெடுஞ்சாலையில் கட்டப்படும் கட்டிடங்கள் சுமார் 7.5 மீட்டர் இடைவெளி விட்டு கட்டப்பட வேண்டும் என்பது விதி. மேலும் வணிகரீதியான கட்டிடங்களுக்கு பக்கவாட்டில் 1 மீட்டர் இடைவெளி விட்டு கட்டப்பட வேண்டும் என விதிமுறைகள் கூறுகின்றது. தற்போது நகரின் மையப்பகுதியில் குறுகலான சாலையில் பிரதான நெடுஞ்சாலையில் பிரபலமான நகைக்கடை கட்டிடம் புதியதாக கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் குறுகலான சாலையில் கட்டப்பட்டுள்ளதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும். மேலும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.
இது போன்று கட்டிடங்கள் கட்டுமான பணியின் போது நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்திருந்தால் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.




































































































