அரசு அதிகரிகளுக்கும், விவசாயிகளுக்கும் தெரியாமல் தேனி சோத்துப்பாறை அணையை திறந்த தவெக வினரை கைது செய்ய வேண்டும் என தேனி மக்களவை உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையை அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுக்கே தெரியாமல் திறந்து ரீல்ஸ் வெளியிட்டு கொண்டாடி உள்ளனர் தவெகவினர்.
தமிழ்நாடு அரசின் சார்பில் அரசாணை வெளியிட்டு , விவசாயிகளுக்கும் , பொது மக்களுக்கும் தெரிவிக்கபட்டு, அமைச்சரோ மாவட்ட ஆட்சியரோ அணையை திறப்பது தான் வழக்கம். ஆனால் பெரியகுளம் தவெக சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐய்ங்கரன் கூறினார் என தவெக வட கிழக்கு மாவட்ட இணை செயலாளர் ஷேக் அலி தலைமையிலான தவெக நிர்வாகிகள் யாருக்கும் தெரியாமல் தன்னிச்சையாக திறந்துவிட்டுள்ளனர்.
இந்த அணையை நம்பி சுமார் 3000 ஏக்கர் பாசன விவசாயிகள் உள்ளனர், 2 லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. இப்போது திடீரென அணை திறப்பால் விவசாயிகளும், பொது மக்களும் பாதிக்கபட்டுள்ளனர். முன் அறிவிப்பின்றி அணை திறக்கப்படுவதால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படக்கூடும் என்ற எண்ணம் இன்றி ரீல்ஸ் வெறியில் அணையை திறந்து விட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு திறக்க வேண்டிய அணையை அரசிற்கு தொடர்பில்லாதவர்கள் திறந்து விட்டதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விஜய் சர்க்கார் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது. செயற்பொறியாளர் சார்பில் புகார் அளிக்கபட்டுள்ளது என கூறப்பட்டாலும் குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. CM sir இன் கட்டுப்பாட்டில் அரசும் இல்லை தவெக கட்சியினரும் இல்லை. பாலியல் குற்ற செயல் முதல் அணை திறப்பு குற்றங்கள் வரை தவெக வினர் எதை வேண்டுமானாலும் செய்யலாம் யாரும் எதுவும் கேட்க முடியாது என்ற எண்ணத்தில் இதுபோன்ற செயல்களை செய்து வருகின்றனர்.
எந்த அனுமதியும் முன்னறிவிப்பும் இன்றி அணையை திறந்த தவெக நிர்வாகிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், அணையை திறக்கக் கூறிய பெரியகுளம் எம். எல். ஏ மீதும் வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரைக் கேட்டுக்கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.




































































































