நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் வேட்பாளர் கார்த்திகாவை அதிகாலையில் நைட்டியுடன் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளது தவெக அரசு. தேர்தல் வழக்குக்காக தீவிவாதியைப் போல் அதிகாலையில் உடைமாற்றக்கூட நேரம் கொடுக்காமல் போலீசார் நடந்துகொண்ட செயலைக் கண்டித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் தங்களது கண்டனத்தை அறிக்கைகளாக வெளியிட்டனர். அதுமட்டுமல்ல, தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்துள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும், காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும் கூட ஒரு தளித் பெண்ணிற்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக தவெக அரசின் காவல்துறையின் செயலைக் கண்டித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் தவெக வின் கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான வன்னியரசு கார்த்திகாவுக்கு ஆதரவாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டதை விமர்சித்து பேசியுள்ளார். அதாவது ஆரிய கடப்பாரையை வைத்து திராவிட கோட்டையை உடைப்பேன், தனிமனித தாக்குதலில் ஈடுபட்ட சீமனை திமுக மறந்திருக்கலாம், பெரியாரையும், கலைஞரைம் மேடைகளில் அநாகரிகமாக விமர்சித்தவர் சீமான். அம்பேத்கரையும் பெரியாரையும் ஏற்றுக்கொண்டவர்களை விசிக ஏற்கும். பார்ப்பனிய அடிமைகளை விசிக ஏற்காது. இப்போது திமுகவுக்கும் வெட்கமில்லை ! நாம் தமிழர் கட்சிக்கும் வெட்கமில்லை ! என விமர்சித்துள்ளார்.

அமைச்சர் வன்னியரசுவின் விமர்சனத்திற்கு, விசிக வின் முன்னாள் நிர்வாகியும், திமுக உறுப்பினருமான பனையூர் பாபு பதிலளிக்கும் வகையில், தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையான கண்டனத்தை பதிவிவிட்டுள்ளார். அதில் நாதக தாராபுரம் வேட்பாளர் கார்த்திகாவை தேர்தல் நேர வழக்குக்காக, அதிகாலையில் அவரது வீடு புகுந்து Night Dress அணிந்திருந்தபடியே கைது செய்திருக்கிறது தவெக வின் பாசிச காவல்துறை. அவதூறு வழக்காக பட்டியல் சமூகத்தை சேர்ந்த அரசியல் பெண் பிரமுகரை அராஜக முறையில் கைது செய்ததை திராவிட முன்னேற்றக் கழகம் கண்டித்திருக்கிறது. நாதக வின் கொள்கை கோட்பாடுகளில் முரண்கள் இருந்தாலும் பாசிச தாக்குதல்களை வேடிக்கை பார்க்க முடியுமா வன்னி அரசு அவர்களே…
ஒரு அமைச்சர் பதவிக்காக ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்து, பாஜக வளர்க்கும் குழந்தையுடன் கொஞ்சி குலாவிக் கொண்டு ‘வெட்கமில்லையா..?’ என நீங்கள் கேட்கலாமா.. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் களைந்து பாலினச் சமத்துவத்தை நிலைநிறுத்தவும் உருவாக்கப்பட்ட பேரியக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அப்படியிருக்க, இதேபோன்றதொரு அத்துமீறல் விசிக வின் பெண் தோழருக்கு நேர்ந்திருந்தால் அமைதி காத்திருப்பீர்களா….?

“காங்கிரஸில் இருந்தாலும் திமுகவில் இருந்தாலும் அதிமுகவில் இருந்தால் சரி.. வேறு எந்த கட்சியில் இருந்தாலும் சரி பட்டியல் சமூகத்தினருக்கு ஒரு பிரச்னையென்றால் நான்தான் வருவேன்” என நம்பிக்கை தெரிவிக்கும்படி அண்ணன் திருமாவளவன் அடிக்கடி பேசுவார். ஆனால் இன்றைக்கும் தவெக அரசின் செயலை நியாயப்படுத்துவதற்காக அடிப்படை கொள்கையிலிருந்து விலகி நிற்பதா…?
பட்டியல் சமூக சகோதரிமீதான காவல்துறையின் அடக்குமுறையை விசிக கண்டிக்காவிட்டாலும் பரவாயில்லை.. ஜனநாயகரீதியாக குரல் கொடுப்பவர்களை விசிக கண்டிப்பது எந்த வகையில் நியாயம்? அதிகார அரசியலுக்காகவும் கூட்டணி நலன்களுக்காகவும் அடிப்படை ஜனநாயகக் குரல்களையும், பெண்களின் கண்ணியத்தையும் பலி கொடுப்பது ஏற்புடையதல்ல என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் தேர்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்த கார்த்திகா உள்ளிட்ட அனைவருக்கும் தாராபுரம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




































































































