டெல்டா டாக்கீஸ் நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன், கார்த்திகா தேவி தயாரித்துள்ள புதிய திரைப்படத்திற்கு “ஆகாயம்” என்று பெயரிட்டுள்ளனர். “தினந்தோறும்” திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தினந்தோறும் நாகராஜ், அதன் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ரசிகர்களாலும், திரையுலகினராலும் அந்தப் பெயரிலேயே அழைக்கப்பட்டார். தொடர்ந்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய “மின்னலே”, “காக்க காக்க” போன்ற வெற்றிப் படங்கள் உட்பட பல படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது. அவர் தற்போது “ஆகாயம்” திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். “கன்னி மாடம்” திரைப்படத்தின் மூலம் தனது இயல்பான நடிப்பால் அனைவரின் கவனம் ஈர்த்த ஸ்ரீராம் கார்த்திக் இப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஆலிஷா மிராணி அறிமுகமாகிறார்.

மேலும் ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயபிரகாஷ், கிரி துவாரகிஷ், ஸ்ரீ தேவகிருஷ்ணன், “மெய்யழகன்” படத்தில் நடித்த இந்துமதி மணிகண்டன், தீபா, “மகாராஜா” திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்ற சஞ்சனா நமீதாஸ், ரோசாரி, ரைட்டர் ஹரிஹரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குனர் தினம்தோறும் நாகராஜ் பேசுகையில், கதையாகச் சொன்னால் ‘ஆகாயம்’ குடிக்கு எதிரான படம். ஆனால், அதை உயிர்த்துடிப்பான ஒரு வாழ்க்கையோடு சொல்லியிருக்கிறேன். தவிர இதில் அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து வந்திருக்கின்றன. படங்கள் அனுபவங்களைத் தந்து, வாழ்க்கைக்குள் நுழைந்து நல் உணர்வுகளைத் தர வேண்டும். அப்படி ஒரு சினிமா செய்வதுதான் நமக்கு கௌரவம். நான் அதைத்தான் செய்திருக்கிறேன். ‘ஆகாயம்’ அப்படியான படம். ஒரு நல்ல நடைமுறை வாழ்க்கையைப் பாசத்தோடும் பரிதவிப்போடும் சொல்லியிருக்கிறேன் என்றார்.
விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

































































































