
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மகளிர் சுய உதவிக் குழு, பெண்கள் நல அறக்கட்டளை சார்பில் பரமக்குடி சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்குக்கும் மேற்பட்ட பெண்கள் கடந்த 2020 – 2022 ஆம் ஆண்டு ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கி உள்ளனர். வாங்கிய கடன் தொகைக்கு மாதந்தோறும் தவணைத் தொகை செலுத்தி கடனை நிறைவு செய்துள்ளனர். அதற்கு சுய உதவி குழு சார்பில் NOC யும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பரமக்குடி நீதிமன்றத்தில் அமைந்துள்ள சட்ட பணிகள் குழு சார்பில் கடனுதவி வாங்கிய பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தை பேசுவதற்காக அழைப்பு விடுத்துள்ளனர். இந்த அழைப்பில் நீங்கள் கடன் தொகை கட்டவில்லை என கூறியுள்ளனர். இதனால் கடன் தொகை கட்டிய நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் பரமக்குடி – இளையான்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் சபரிநாதன் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.