
மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க கருத்து கேட்பு கூட்டத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து அதிகாரிகள் கூட்டம் முடியும் முன்னரே கிளம்பி சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே முத்துவயல் கிராமத்தில் ராமநாதபுரம் மருத்துவர்கள் கூட்டமைப்பு அமைப்பின் சார்பில் பொது உயிரி மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க ( தனியார் ) இடம் தேர்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு முத்துவயல் கிராம மக்கள் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இன்று சத்திரகக்குடி தனியார் மகாலில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜீலு, பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் சரவண பெருமாள் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இதில் முத்துவயல் கிராம மக்கள், நாம் தமிழர் கட்சியினர், ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குழுவினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைந்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நோய் தொற்று ஏற்படும், நிலத்தடி நீர் மாசுபடும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை முன் வைத்தனர். தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்து மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது எதிர்ப்பு குழுவினருக்கும், மருத்துவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜீலு, பரமக்குடி கோட்டாட்சியர் சரவணபெருமாள் ஆகியோர் கருத்துக்கட்டு கூட்டத்தை புறக்கணித்து பாதியிலே கிளம்பி சென்றனர்.