கலாமயா சினிவேர்ஸ் நிறுவனம் சார்பில் கிதேஷ்விஸ்வம்பரன், அனுகோபால் வேணுகோபால் தயாரிப்பில், கருணாஸ், நிமிஷா சஜயன், விஜயலட்சுமி வீரமணி, கமலேஷ் ஜெகன், பூர்ணிமா பாக்யராஜ், ஒய் ஜீ மகேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில், சஜீவ் பழூர் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “என்ன விலை”.
கதைப்படி.. ராமேஸ்வரம் கடற்கரையில் அக்னி தீர்த்தத்தில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக விட்டுச் செல்லும் பொருட்களை சேகரிக்கும் மீனவர் தவசிமுத்து ( கருணாஸ் ). மனைவி, இரு குழந்தைகள் மற்றும் தங்கையுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஒருநாள் கடலில் மூழ்கி நாணயங்களை சேகரிக்கும் போது, விலையுயர்ந்த தங்க பதக்கம் கிடைக்கிறது. அதனை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார். காவலர்களின் பேராசையால், அதிகாரத்தைப் பயன்படுத்தி தவசிமுத்துவுக்கு திருட்டு பட்டம் சுமத்தி சிறையில் அடைக்கின்றனர். இச்சம்பவத்தால் குடும்பமே நிலைகுலைந்து போகிறது.

இந்நிலையில் நேர்மையான வழக்கறிஞர் காஞ்சனா ( நிமிஷா சஜயன் ) தவசிமுத்துக்காக வாதாடுகிறார். இதற்கிடையில் அக்கம் பக்கத்தினர் கேலி, கிண்டல் பேச்சுக்களால் குடும்பத்தினர் மனதளவில் பாதிக்கின்றனர். குறிப்பாக தவசிமுத்துவின் மகன் மன உளைச்சலுக்கு ஆளாகிறான். தந்தை திருடன் என நீதிமன்றம் சொன்னதும் உயரமான மலையிலிருந்து குதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். இதற்கிடையில் அந்த பதக்கம் அரசுக்குச் சொந்தமான ? தவசிமுத்துக்கு சொந்தமா ? என்கிற விவாதம் நடைபெறுகிறது. தவசிமுத்து இந்த பிரச்சினையில் இருந்து வெளியில் வந்தாரா ? பதக்கம் யாருக்குச் சொந்தமானது ? என்பது மீதிக்கதை..

வாழ்வாதாரத்திற்காக கடலில் நாணயங்களை சேகரித்து, கண்ணியத்துடனும், சுயமரியாதையிடனும் வாழ்வதற்காக போராடும் மனிதனின் வாழ்க்கையை அற்புதமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
வாழ்வாதாரத்திற்காக கடலில் மூழ்கி நாணயங்களை சேகரித்து, தனக்கு கிடைக்காத கல்வி குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என படிக்க வைக்கும் பொறுப்பான தந்தை, தங்கை மீது பாசமுள்ள அண்ணன், மனைவிக்கு அன்பான கணவன் என ராமேஸ்வரம் மண்ணின் மைந்தனாகவே தவசிமுத்து கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் கருணாஸ். குறிப்பாக உயிருக்குப் போராடும் மகனின் நிலைமையை உணர்ந்து, பணம் காசு கிடக்குது, பறிபோன மானத்திற்கு என்ன விலை என அப்பாவித்தனமாக கருணாஸ் பேசும்போது அனைவரையும் கண்கலங்க வைக்கிறது அவரது நடிப்பு.
அதேபோல் நிமிஷா சஜயன், விஜயலட்சுமி வீரமணி, ஷாஷா சிவக்குமார் உள்ளிட்ட ஒவ்வொருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதேபோல் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள பிரபு, பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

































































































