திவ்ய சேத்ரா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சி.ஆர். ராஜன் தயாரிப்பில், ராஜன் தேஜஸ்வர், ஐரா அகர்வால், ஜார்ஜ், சாய்தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஸ் பெராடி, வாசுதேவன் முரளி உள்ளிட்டோர் நடிப்பில், திருஅருள் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “அமரம்”.
கதைப்படி.. மலையடிவாரத்தில் உள்ள கிராமத்தில் வசிக்கும் மக்கள், மழை பொய்த்துப் போனதால் விவசாயம் செய்ய வழி இல்லாமல், மக்கள் அருகிலுள்ள ஊர்களுக்கு இடம் பெயர்கின்றனர். எஞ்சி இருப்பவர்கள் மரம் வெட்டும் தொழிலுக்கு செல்கின்றனர். இந்நிலையில் அருகன் ( ராஜன் தேஜஸ்வர் ) எந்தவித லட்சியமும் இல்லாமல், வாழ்வாதாரத்திற்கு பணத்திற்காக கொலை செய்யும் தொழிலில் இரங்குகிறான். முதலாளி வர்க்கத்தினர் தங்களது சுயலாபத்திற்காக பல்வேறு கொலைகளை அரங்கேற்ற அருகனை பயன்படுத்துகின்றனர்.

இந்த சூழலில் கனிமவள கடத்தல் சம்பந்தமாக ஆதாரங்களை சேகரித்து, இயற்கை வளங்களை பாதுகாக்க போராட்டங்களில் ஈடுபட்டுவந்த கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பிரமுகரை கொலை செய்யும் திட்டத்தை அருகனிடம் ஒப்படைக்கின்றனர். அந்த திட்டத்தை கச்சிதமாக நிறைவேற்றுகிறான் அருகன். ஆனால் கொலை சம்பவம் நடைபெற்றபோது, ஏற்பட்ட கைக்கலப்பில், கொலையானவரின் மகள் ஷர்மிளா பாரதி ( ஐரா அகர்வால் ), அருகனை அடையாளம் காண்கிறார். பின்னர் சில அரசியல் பின்னணியில், தனது தந்தையை கொன்ற அருகனை பழிவாங்க அடியாட்களுடன் மலையடிவார கிராமத்திற்கு வருகிறார் ஷர்மிளா பாரதி. அங்கே எதிர்பாராத வகையில் சில சம்பவங்கள் அரங்கேறுகிறது.
அதன்பிறகு அருகன், ஷர்மிளா பாரதி வாழ்க்கை என்னானது ? அப்பகுதியில் நடந்தேறும் கொலைகளுக்கான பின்னனி என்ன ? என்பது மீதிக்கதை..

மலையடிவாரத்தில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்களை, சுயலாபத்திற்காக பயன்படுத்தும் முதலாளித்துவம், காதல், அதிகாரம், வன்முறை என சமூகப் பொருளாதார பிரச்சினைகளை பேசியிருக்கிறார் இயக்குனர். ஆனால் திரைக்கதையில் இன்னும் கவணம் செலுத்தியிருந்தால் படம் பேசப்பட்டிருக்கும்.
நாயகனாக நடித்திருக்கும் ராஜன் தேஜஸ்வர், படத்தில் தனக்கு வசனங்கள் குறைவு என்றாலும் உடல் மொழியால் உணர்வுகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்கிறார். அதேபோல் நாயகியாக ஐரா அகர்வால், தனது கதாப்பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதாவது தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்துள்ளனர். மேலும் இசையமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளரின் பணிகள் சிறப்பு.

































































































