திண்டுக்கல் மாவட்டம் பழனி ஊராட்சி ஒன்றியம் காவலப்பட்டி ஊராட்சியில், கடந்த சில மாதங்களாக தெருக்களை சுத்தம் செய்யாததால் ஊர் முழுவதும் குப்பை மேடாக காட்சியளிப்பதோடு, கழிவுநீர் கால்வாய் நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த ஊருக்கு அருகிலுள்ள புதுக்குளம் கிராமத்தில் உள்ள கிணற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அந்த தண்ணீர் உப்பு கலந்து வருவதால், அதனை குடிக்கும் பொதுமக்களுக்கு சிறுநீரக கல் அடைப்பு உள்ளிட்ட பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது சம்பந்தமாக புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் அந்த தண்ணீரை ஆய்வுக்கு உட்படுத்தி சுகாதாரமான வகையில் குடிநீரை வழங்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் அருகிலுள்ள பச்சை ஆற்று தண்ணீரை இந்த கிராமத்திற்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பெரும்பாலான பொதுமக்கள் விரும்புகின்றனர்.
பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய பழனி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், காவலப்பட்டி கிராம மக்களின் கோரிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு உடனடியாக நிறைவேற்ற வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தாமதப்படுத்தினால், பழனி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.



































































































