“டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இசை & முன்னோட்டம் வெளியீடு !

Spread the love

நடிகர் சசிகுமார் – சிம்ரன் ஆகிய இரண்டு பிரபல நட்சத்திரங்களும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார். தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்-மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள் மகேஷ் ராஜ் பஸ்லியான், யுவராஜ் கணேசன், இயக்குநர் அபிஷன் ஜீவிந், நாயகன் சசிகுமார், நடிகர் மிதுன் ஜெய் சங்கர், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், எனக்கு இந்த மேடை மிக முக்கியமான மேடை. ‘ஈசன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஜில்லா விட்டு ஜில்லா வந்து.. எனும் பாடலை நாங்கள் எந்த படத்திற்காக எழுதினோமோ.. அந்தப் படத்தில் இருந்து அந்தப் பாடலை நீக்கி விட்டார்கள். அதன் பிறகு ஒரு வருடம் கழித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எனக்கு போன் செய்து, ‘ஈசன் படத்தில் ‘ஜில்லா விட்டு ஜில்லா வந்து’ பாடல் இடம்பெறுகிறது. சசிகுமாருக்கு அந்த பாடல் மிகவும் பிடித்து விட்டது’ என்றார். நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அந்த தருணங்கள் இன்றும் என் மனதில் பசுமையாய் இருக்கிறது. ஜேம்ஸ் வசந்தனின் ஸ்டுடியோவில் சசிகுமாரிடம் என்னை அறிமுகப்படுத்திய பிறகு, அவர் பாடல் சிறப்பாக இருக்கிறது என வாழ்த்தினார்.  அந்த வாழ்த்தை என்னால் மறக்க இயலாது. அந்தப் பாடல் எனக்கான அடையாளமாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து யுவன்  ஸ்டுடியோவில் ஒருவர் என்னை சந்தித்து நான் பட தயாரிப்பில் ஈடுபட்டால் உங்களுக்கு வாய்ப்பு தருவேன் என்று வாக்குறுதி தந்தார். அவர்தான் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன். அவர் தயாரித்த ‘குட்நைட்’ படத்தில் எல்லா பாடல்களையும் எழுதும் வாய்ப்பையும் வழங்கினார். அவர் தயாரிப்பில் சசிகுமார் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நானும் பணியாற்றியதற்கு பெருமிதம் கொள்கிறேன். இந்தப் படத்திற்கு நாயகன் சசிகுமார் என்று சொன்னவுடன் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த படத்தின் பாடல்களை எழுத வேண்டும் என தீர்மானித்தேன். அதேபோல் இயக்குநர் அபிஷனும் கதையை சொன்னது போல் எடுத்திருக்கிறார். சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். ஒரு படம் சிறப்பாக உருவாகும் போது தான் அதனை நாம் கொண்டாட முடியும். இந்தப் படத்தின் இயக்குநர் அபிஷன் சின்ன பையன் தான். இருந்தாலும் மிகப்பெரிய இயக்குநராக வருவார். சசிகுமார் இப்படத்தில் இருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. மற்றொரு தயாரிப்பாளர் மகேஷ் ராஜும் எங்களுக்கு ஆதரவாக இருந்தார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் மொட்டை மாடியில் ஒரு பாடலை பாடுவார். அந்தப் பாடல் யூடியூப்பில் பிரபலமானது. அந்த பாடலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். இவருடன் இணைந்து எப்போது நாம் பணியாற்றுவோம் என ஆவலுடன் காத்திருந்தேன். இயக்குநர் பொன் குமார் மூலம் ‘1947’ எனும் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினோம். ‘குட்நைட்’ படத்தில் இணைந்து பணியாற்றினோம். அந்தப் படத்தில் உள்ள எல்லா பாடல்களும் வெற்றி பெற்றது. மிகவும் மகிழ்ச்சி. அவருடன் ஒரு பாடலுக்காக இணைந்து பணியாற்றும் அனுபவமே சிறப்பானது. அவருடைய பேச்சுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். ‘குட்நைட்’, ‘லவ்வர்’ ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வெளியாகிறது. ஹாட்ரிக் வெற்றியை பெறுவார்கள். படம் வெளியாவதற்கு முன் படத்தைப் பற்றிய பேச்சு இருக்கிறது. படம் வெளியான பிறகும் இந்த பேச்சு நீடிக்கும். இந்தப் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும், படத்தில் பணியாற்றி அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பஸ்லியான் பேசுகையில், ‘குட்நைட் – லவ்வர் ஆகிய படங்களை தொடர்ந்து ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எங்களின் மூன்றாவது படம். இரண்டு ஹிட் படங்களை கொடுத்திருக்கிறோம். இந்த படமும் ஹிட் ஆகும் என நம்புகிறேன். சசிகுமாருக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர்-நடிகர் என பிரபலமாக இருக்கும் அவர் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்ததற்கு நன்றி. இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்து, அவருக்கும் மகிழ்ச்சியை வழங்குவோம் என நம்புகிறேன்.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பொருத்தவரை இது ஒரு கூட்டு முயற்சி. இயக்குநர் அபி என்னை சந்தித்து கதையை சொல்லும்போது அவருக்கு 23 வயது தான். கதையை இடைவேளை வரை கேட்கும்போது அதிர்ச்சியாகி விட்டேன். முழு கதையைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.‌ அந்தக் கதையை கேட்டதும் இயக்குநர் அபியை எனக்கு ஆத்மார்த்தமாக பிடித்திருந்தது.‌ அந்தக் கதையில் அவர் சொன்ன விசயங்கள் ஜீவன் உள்ளதாக இருந்தது. அவர் கதையை எப்படி சொன்னாரோ… அதை அப்படியே திரைக்கு கொண்டு வந்திருக்கிறார். நல்ல படத்தை உருவாக்கி இருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் அற்புதமாக பின்னணி இசை அமைத்திருக்கிறார். படத்தை பார்க்கும் போது பல காட்சிகளுடன் நம்மால் எளிதாக தொடர்பு கொள்ள முடியும். இதற்கு இவரின் இசை உதவி செய்திருக்கிறது. இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்களும், நடிகைகளும் பணியாற்றி இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசுகையில், குட்நைட் – லவ்வர் ஆகிய இரண்டு படங்களுக்கும் கிடைத்த ஆதரவால் தான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’யை உருவாக்க முடிந்தது. இதற்காக முதலில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் அபிஷன் கதையை சொல்லத் தொடங்கியதும் ஐந்தாவது நிமிடத்தில் ஒரு ‘மொமென்ட்ஸ்’ வரும். அதைக் கேட்டவுடன் இந்த படத்தை நிச்சயம் தயாரிக்கலாம் என்றேன். அந்தத் தருணத்தில் இந்த படம் எப்படி வரும் என்று நான் நினைத்திருந்தேனோ.. அதேபோல் இயக்குநர் அபிஷன் உருவாக்கி இருந்தார். இந்த வயதில் இவ்வளவு பெரிய கடின முயற்சியை நான் கண்டதில்லை. அவர் எதிர்காலத்தில் மிக சிறப்பான இயக்குநராக வருவார்.‌ இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய இடத்தை பெற்றுத் தரும்.‌ திரை உலகில் அவருக்கு பேராதரவு கிடைக்கும் என நான் நம்புகிறேன்.

சசிகுமார் இல்லை என்றால் நாங்கள் இந்த படத்தை தயாரித்திருக்கவே மாட்டோம். 16 வயதுடைய மகனுக்கு அப்பா கேரக்டர் என்றால் இவரைத் தவிர வேறு யாரும் எங்களின் நினைவுக்கு வரவில்லை. இந்தக் கதையை புரிந்து கொண்டு கதையின் நாயகனாக நடிப்பதற்கு ஒரு துணிச்சல் தேவை. அதை மேற்கொண்டு எங்களுக்கு ஆதரவு அளித்த சசிகுமாருக்கு நன்றி. மோகன் ராஜனின் பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். சில கலைஞர்கள் இல்லை என்றால் படம் உருவாக்க வேண்டாம் என நினைப்பேன். அத்தகைய கலைஞர்கள் தான் மோகன் ராஜன் – ஷான் ரோல்டன் – பரத் விக்ரமன். எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாராகும் அனைத்து படங்களிலும் இவர்களின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். சில படங்களுக்கு இசையை தவிர்த்து விட்டு ரசிக்க முடியாது. எந்த கதையை நான் கேட்டாலும் முதலில் இதில் ஷான் ரோல்டனின் இசை எப்படி இருக்கும், என்ன மாயஜாலம் செய்யும், என்று தான் யோசிப்பேன். அப்படி யோசித்துக் கொண்டுதான் கதையையே கேட்பேன். இதுவரை நான் கேட்ட கதைகளுக்கு நான் நினைத்ததை விட அற்புதமாக இசையமைத்து கொடுத்திருக்கிறார் ஷான் ரோல்டன். இதற்காக அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மகேஷ் என் பார்ட்னர். பொதுவாக இரண்டு பேர் இணைந்து பணியாற்றினால் கிரியேட்டிவ் டிஃபரன்ஸ் வரும்.‌ ஆனால் மகேஷ் நான் என்ன நினைத்து செய்தாலும் அதற்கு முழு பக்க பலமாக இருப்பார். நாங்கள் இதுவரை இரண்டு படங்களை வெற்றிகரமாக தயாரித்திருக்கிறோம். இப்பொழுது மூன்றாவது படத்தில் இணைந்திருக்கிறோம். மகேசின் ஆதரவு இல்லை என்றால் என்னால் தொடர்ந்து இயங்க முடியாது. இதற்காக அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் யாரையும் எந்த ஒரு தருணத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தாது என்பதை மட்டும் நான் இங்கு உறுதியாக சொல்கிறேன். இந்தத் திரைப்படம் எங்கள் குழுவினரின் நேர்மையான முயற்சி. அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும். அன்பை கொடுக்கும். ரசிகர்களை கவர்வதற்கான அனைத்து விசயங்களும் இப்படத்தில் உள்ளது. மே முதல் தேதி அன்று வெளியாகிறது என்றார்.

இயக்குநர் அபிஷன் ஜீவிந் பேசுகையில், பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது திரைப்படத்தை இயக்குவது தான் லட்சியம் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு புள்ளிக்குப் பிறகு நான் யாரிடமும் பணியாற்றாமல் கதை எழுதத் தொடங்கினேன். நான் எழுதிய கதையை எந்தவித தயக்கமும் இல்லாமல் தயாரிப்பாளர்கள் கேட்டனர். கதையை கேட்ட பிறகு வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர்கள் மகேஷ் –  யுவராஜ் ஆகியோருக்கு என் முதல் நன்றி. படத்தின் முதல் பாதி கதையை கேட்டதும் தயாரிப்பாளர் யுவராஜ் இப்படத்தை உருவாக்குவோம் என நம்பிக்கை அளித்தார். அந்த தருணம் அற்புதமானது.‌

இப்படத்திற்கு சசிகுமார் தான் ஹீரோ என நிச்சயத்துக் கொண்டு அவரை சந்தித்து கதை சொல்லப் போனேன். கதையை அவரிடம் சொல்லும் போது அவர் எந்த ரியாக்ஷனையும் காண்பிக்கவில்லை. அதன் பிறகு நான் சற்று சோர்வடைந்தேன். அன்று மாலை தயாரிப்பாளர் யுவராஜ் போன் செய்து சசிகுமாருக்கு கதை பிடித்து விட்டது என சொன்னார். அப்போது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இப்படத்தில் குழுவாக இணைந்து பணியாற்றுவதற்கு சிறப்பான தொழில்நுட்ப கலைஞர்களைத்தான் தயாரிப்பாளர்கள் வழங்கினார்கள். அதில் முதன்மையானவர் ஷான் ரோல்டன். அவரின் இசை இல்லை என்றால் இந்தப் படம் இல்லை. இந்த படத்தின் மூலம் எனக்கு பாராட்டு கிடைத்தால்.. அதில் 50 சதவீதம் ஷான் ரோல்டனைத்தான் சாரும். அந்த அளவிற்கு இந்த படத்தில் அவர் கடினமாக உழைத்திருக்கிறார். மோகன் ராஜனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் சிலிர்ப்பானது. ‘முகை மழை’ என்ற வார்த்தைக்கு அவர்தான் பொருள் சொல்லி புரிய வைத்தார். ஷான் ரோல்டன் – மோகன் ராஜன் ஆகிய இருவரிடமிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். சிம்ரன் போன்ற அனுபவம் மிக்க நட்சத்திரத்துடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி.‌ மிதுன் ஜெய் சங்கர் – கமலேஷ் ஆகிய இருவரும் இப்படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், இந்த இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் மூன்றாவது படத்தில் இணைந்து பணியாற்றிருக்கிறேன். இந்தப் பயணத்தின் போது சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த ஆரோக்கியமான விவாதங்கள் நிறைய நடந்தது.‌ அதனால் முதலில் இரண்டு தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோரும் என்னிடம் எப்போது நம்பர் ஒன் ஆக வரப்போகிறீர்கள் ? என கேட்கிறார்கள். நான் அதற்காக வரவில்லை.‌ நல்ல படைப்புகளுக்கு இசையை வழங்கி அதனை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது அதன் மூலமாக கிடைக்கும் நல்ல விசயங்கள் தான்.. என்னுடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. திடீரென்று உயரத்திற்கு சென்று விட்டால்… அந்த உயரத்தில் நின்று கொண்டு, அந்த உயரத்தை தக்க வைப்பது என்பது கடினமான செயல்.‌ பலர் பல ஐடியாக்களை சொல்வார்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை இசை இந்த சமூகத்திற்கு எப்படி பலன் அளிக்க வேண்டும். எந்த மாதிரியான இசையை சமூகத்திற்கு வழங்க வேண்டும் என்பது போன்ற சிந்தனையை கொண்டவன் நான். அந்த வகையில் நான் இதுவரை என்னுடைய சினிமா இசை பயணத்தில் சந்தித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல நல்ல படங்களில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக எல்லோருக்கும் நன்றி சொல்கிறேன்.

என்னுடைய நண்பரும் இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர்மான விஜய் இப்படத்தின் கதையை கேளுங்கள் என்று சொன்னார். பொதுவாக நான் கதையை கேட்பதை தவிர்த்து விடுவேன். திரைக்கதையை வழங்கி விடுங்கள். நான் வாசித்து தெரிந்து கொள்கிறேன் என்று சொல்லிவிடுவேன். திரைக்கதையை வாசிக்கும் போது அந்த திரைக்கதையில் இசைக்கான வேலை என்ன? என்பது தெரிந்துவிடும். ஏனெனில் சில கதாபாத்திரங்களில் மன ஓட்டத்தை இசையால் சொல்லிவிட முடியும். இருந்தாலும் இப்படத்தின் இயக்குநர் அபி கதையை நான் ஒரு முறை சொல்கிறேன் கேளுங்கள் என்றார். கதையை இரண்டு மணி நேரம் சொன்னார். கதையை சொல்லும்போது திரையில் காட்சிகளாக இப்படித்தான் தோன்றும் என்ற விசுவலை உண்டாக்கினார். அவர் கதை சொன்ன விதத்தை பார்த்து வியந்து போனேன். இந்தப் படத்தின் கதையும் வித்தியாசமாக இருக்கும்.

இப்போதுள்ள சூழலில் ஒரு நல்ல படத்தை எடுக்க வேண்டும் என்றால் அதில் நல்ல கதாபாத்திரங்கள் இருக்க வேண்டும். ஒரு டிராமா இருக்க வேண்டும். குடும்ப மதிப்பீடுகள் இருக்க வேண்டும்.. என பல விசயங்கள் உண்டு. இதனை அனுபவமிக்க இயக்குநர்களுக்கு இயல்பானது. ஆனால் அபி போன்ற ஒரு புதுமுக இயக்குநருக்கு… இத்தகைய ஒரு பொறுப்புணர்ச்சி இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.‌ ஒரு கட்டமைப்புக்குள் இயங்குவது என்பது வேறு. ஒரு இயக்குநராக என்னுடைய குரல் இது என வெளிப்படுத்துவது வேறு. ஆனால் இயக்குநர் அபி தன் நிலைப்பாட்டை தெளிவாக சொன்னார். இந்தப் படம் என்னை சிந்திக்க வைத்தது. இதற்காக உங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் பணியாற்றியதை நான் ஆசீர்வாதமாகவே கருதுகிறேன்.

சசிகுமாரை இயக்குநராகவும், நடிகராகவும் பல கோணங்களில் ரசித்திருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் இணைந்திருக்கிறேன். இந்தப் படத்தில் அவருடன் இணைந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். பாடலாசிரியர் மோகன் ராஜன் என்னுடைய இனிய நண்பராக அறிமுகமானதற்கும் அவருடைய ஈசன் படத்தில் இடம்பெற்ற பாடல் தான். அதற்காகவும் உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை சொல்கிறேன்.‌ சசிகுமாரின் நடிப்பு இந்தப் படத்தில் ஸ்பெஷலாக இருக்கும். இந்தப் படத்தில் அவருடைய நடிப்பை நான் மிகவும் ரசித்தேன், மகிழ்ந்தேன். பாடலாசிரியர் மோகன் ராஜன் – அவருடைய தமிழ் இந்த கால இளைஞர்களுக்கு அவசியமானது. புதுமை என்பது.. ஏற்கனவே இருந்ததன் தொடர்ச்சி தான். தமிழ் திரை உலகில் பணியாற்றுகிறோம். பாடலில் தமிழுக்கு இடமில்லை என்றால் எப்படி? இது போன்ற விசயத்தில் என்னைப்போல் உறுதியாக இருந்து பாடலில் தமிழை இடம்பெறச் செய்வதில் அவருக்கும் பங்கு உண்டு. நாங்கள் தங்கிலீஷிலும் பாடல் எழுதுவதுண்டு. இருந்தாலும் தமிழிலும் பாடல்கள் இடம்பெற வேண்டும். தமிழ் மொழியை காதில் கேட்க வேண்டும். ஏனெனில் தமிழ் ஒரு செம்மொழி. அவரும் நானும் சந்தித்து பேசத் தொடங்கினால்.. நேரம் செல்வதே தெரியாது. மகிழ்ச்சி நீடிக்கும்.

கலை என்பது மகிழ்ச்சியிலிருந்து தான் பிறக்கிறது. கலைஞர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான் அவர்களிடமிருந்து பிறக்கும் கலையும் மகிழ்ச்சியாக இருக்கும். கலை என்பது உட்கிரகித்தல் தான். ஒத்த சிந்தனை உள்ளவர்கள் இணையும்போது தான் நல்ல படைப்பு கிடைக்கும். இப்படத்தில் நடித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படத்தை நீங்கள் தியேட்டரில் நன்றாக அனுபவித்து ரசிப்பீர்கள். இங்கு குடும்பத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை பழைய விசயமாக பேசுகிறார்கள். இது தவறு. குடும்பங்கள் தான் நல்ல விசயங்களை நினைவு படுத்தும். என் குடும்பம் இல்லை என்றால் நான் இந்த தொழிலில் இருக்க முடியாது.‌ சில பேர் ‘குடும்பம் தானே தடையாக இருக்கிறது’ என்பார்கள். ஆனால் குடும்பம் தான் நமக்கு பக்க பலமாக இருக்கிறது. நீங்கள் தவறு செய்தால் முதலில் கேள்வி கேட்பது குடும்பம் தான். அதே தருணத்தில் நீங்கள் வீழ்ச்சி அடையும் போது உங்களை கை தூக்கி விடுவதும் குடும்பம் தான். அதனால் குடும்ப படங்களுக்கு வரவேற்பு அளிக்க வேண்டும். குடும்பங்களில் சினிமாவின் தாக்கம் அதிகம். அதனால் குடும்பத்தை பற்றிய சினிமாக்களின் எண்ணிக்கை குறையக்கூடாது. அந்த வகையில் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

நாம் கொரிய நாட்டு திரைப்படங்களை பார்த்து ரசிக்கிறோம். எந்த மாதிரியான கொரியன் படங்களை பார்த்து ரசிக்கிறோம் என்பதை பாருங்கள். மொழி என்ற எல்லையை கடந்து மனித  குடும்பத்திடம் பேசும் படங்களை தான் பார்த்து ரசிக்கிறோம். அந்த வகையில் டூரிஸ்ட் ஃபேமிலி தமிழ் படமா? என்று கேட்டால்.. ஆமாம் தமிழ் படம் தான். அதையும் கடந்து நம் மனித குடும்பத்திற்கு தேவையான அழகான கொண்டாடப்பட வேண்டிய கொண்டாட்டமான அன்புச் செய்தியை சொல்லப் போகும் சிறந்த படமாக இருக்கும் ” என்றார்.

நடிகர் சசிகுமார் பேசுகையில், படக்குழுவினர் மேடையில் இவ்வளவு விசயங்களை பேசுவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் இது போன்ற மேடையில் தான் தங்களது நன்றியை தெரிவிக்க இயலும். படம் வெளியான பிறகும் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதை மட்டும் அறிமுக இயக்குநருக்கு அறிவுரையாக சொல்கிறேன். நன்றி தெரிவிப்பது நல்ல விசயம்.

இந்த படத்தை பார்த்த தயாரிப்பாளருக்கு முழு திருப்தி என்றாலும், ரசிகர்களிடம் கிடைக்கும் ஆதரவிற்காகத்தான் சற்று பதட்டத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன். படத்தைப் பற்றி படக்குழுவினரான நாங்கள் பேசுவதை விட.. படத்தை பார்க்கும் ரசிகர்களும், ஊடகங்களும் பேச வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

தயாரிப்பாளர்கள் இருவரும் நண்பர்கள். அந்த ஒரு காரணத்தினாலேயே அவர்களை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர்கள் எடுத்த ‘குட்நைட்’ ‘லவ்வர்’ என்ற இரண்டு படங்களும் அனைவரும் ரசித்த படங்கள். அதனால் அவர்கள் கதையை தேர்வு செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள் என நினைத்து, நான் தான் இந்த படத்தில் படத்திற்குள் வந்தேன்.  இது எனக்கு தான் பெரிய விசயம்.

கதை சொல்லும் போது இயக்குநர் என்னென்னவோ செய்து காண்பித்தார். நான் அதை கவனித்துக் கொண்டே இருந்தேன். இயக்குநருடன் வந்த தயாரிப்பாளர் யுவராஜ் ரியாக்சன் செய்து கொண்டே இருந்தார். நான் அவரையும் அமைதியாக கவனித்துக் கொண்டே இருந்தேன். இருந்தாலும் நான் இது போன்றதொரு நல்ல கதையை கேட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. என்னிடம் சொன்ன கதையை சிறிது மாற்றாமல் அப்படியே எடுத்திருக்கிறார்கள். இது இயக்குநர் அபியின் வெற்றியாக நான் நினைக்கிறேன்.

எனக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்கள் என்று சொன்னவுடன் உற்சாகமாகி விட்டேன். அவர்களுக்கும் இந்த கதை பிடித்திருந்தது. அதனால் நடிக்க சம்மதம் தெரிவித்தார்கள். எல்லோருக்கும் சிம்ரன் பிடிக்கும் இந்தப் படத்திலும் சிம்ரன் நடிப்பு அனைவருக்கும் பிடிக்கும். அவர்களும் இந்தப் படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திலும் அவர் ஹீரோயின். நான் ஹீரோ.  அதனால் அவர்கள் இப்போது கூட ஹீரோயினாக நடிக்கலாம்.

இந்தக் கதை எனக்கு ஏன் பிடித்தது என்றால் இந்த கதையின் நாயகன் ஈழத்தமிழ் பேசுபவன். ஈழத்திலிருந்து ஒரு குடும்பம் இங்கு வந்து எப்படி தங்களுடைய வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை. இதை பார்க்கும் போது காமெடியாக இருக்கும்.

பொதுவாக ஈழத் தமிழர்களைப் பற்றிய படம் என்றால் அது சோகமாகவும், வலி மிகுந்ததாகவும் இருக்கும். ஆனால் இந்தப் படம் சந்தோசமாக இருக்கும். ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கும். ஆனால் உள்ளுக்குள் ஒரு வலியையும், விசயத்தையும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். வலியை மறைத்து தான் நாம் சந்தோஷத்தை கொடுக்க முடியும். அந்த வகையில் இந்த குடும்பம் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும்.

அவர்கள் அடுத்த தலைமுறையினருக்காக கஷ்டப்படுகிறார்கள். நாம் படும் கஷ்டங்கள் நம்முடைய தலைமுறையினர் படக்கூடாது. குழந்தைகளை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என பெற்றோர்கள் நினைக்கிறார்கள் . இதனால் தங்களுக்குள் உள்ள வலியை மறந்து- மறைத்து அவர்களுக்காக வாழ்கிறார்கள். இந்தப் படம் உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் பொருந்தும். அனைவருக்கும் பொருந்தும்.

உலகத்தில் உள்ள ஈழத் தமிழர்கள் இப்படத்தை பார்க்கும் போது நம்முடைய கலாச்சாரத்தையும், நம்முடைய தமிழ் மொழியையும் மறந்துவிடாமல் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இந்த எண்ணம் குறைந்தபட்சம் பத்து பேருக்கு ஏற்பட்டாலும் வெற்றிதான். இதை உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் தங்களுடைய குடும்பத்துடன் வந்து பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இது ஒரு ஃபீல் குட் மூவி.

இயக்குநரிடம் இதற்கான இன்ஸ்பிரேஷன் எது? என்று கேட்டபோது அவர் ‘தெனாலி’ திரைப்படம் என்றார். அதனால் இந்தத் திரைப்படம் பார்க்கும்போது ‘தெனாலி’, ‘மொழி’ போன்ற படங்கள் நினைவுக்கு வரலாம் என நம்புகிறேன். 

இந்தப் படத்தில் என்னுடைய மூத்த மகனாக நடித்திருக்கும் மலையாள நடிகர் மிதுன் சிறப்பாக நடித்திருக்கிறார்.   இந்தப் படத்தில் கமலேஷ் என ஒரு குழந்தை நட்சத்திரம் நடித்திருக்கிறார். அவர்தான் இந்த படத்திற்கு காமெடி. அவர்தான் உங்கள் அனைவரையும் சிரிக்க வைக்கப் போகிறார்.

இந்த படத்தில் பாடல்களும், இசையும் நன்றாக இருக்கிறது.  இந்தப் படம் அன்பை போதிக்கிறது. மே மாதம் முதல் தேதி அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. வந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Related Posts

“சொட்ட சொட்ட நனையுது” படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

Spread the love

Spread the loveஅட்லெர் எண்டர்டெயின்மெண்ட் ( Adler Entertainment ) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் S ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “சொட்ட சொட்ட நனையுது”.…

Read more

“சரண்டர்” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

Spread the love

Spread the loveஅப்பீட் பிக்சர்ஸ் ( Upbeat Pictures ) சார்பில், தயாரிப்பாளர்  VRV குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கௌதம் கணபதி இயக்கத்தில், தர்ஷன் நாயகனாக நடிக்க, காவல்துறை பின்னணியில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சரண்டர்”. இப்படம்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“சொட்ட சொட்ட நனையுது” படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“சொட்ட சொட்ட நனையுது” படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

விசாரணைக்குச் சென்ற உதவி ஆய்வாளர் படுகொலை ! காவல்துறைக்கே இந்த நிலைமையா ?.!

விசாரணைக்குச் சென்ற உதவி ஆய்வாளர் படுகொலை ! காவல்துறைக்கே இந்த நிலைமையா ?.!

“சரண்டர்” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“சரண்டர்” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“ஜென்ம நட்சத்திரம்” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !

“ஜென்ம நட்சத்திரம்” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !

“கெவி” திரைவிமர்சனம்

“கெவி” திரைவிமர்சனம்