திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அறிவொளி நகர் பகுதியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக 110 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். மேலும் மேற்படி குடியிருப்பு பகுதி மேய்ச்சல் புறம்போக்கு வகைப்பாட்டில் உள்ளதால், இது வரை பட்டா வழங்கப்படவில்லை.
மேலும் பெரும்பாலான வீடுகளுக்கு மின் இணைப்பின்றி இருளில் மூழ்கியுள்ளது.

மேலும் அடிப்படை வசதிகள் இன்றி இங்குள்ள சுமார் 37 பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோர் பள்ளிக்கு செல்வதில்லை. சமீப காலமாக சிங்கப்பெண் அதிரடிப்படையினர் சிறுவர்களை கண்காணித்து பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் தற்போது பள்ளி மாணவர்கள் 37 பேருக்கு ஆதார் அடையாள அட்டை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் இது குறித்து ஆட்சியருக்கும் சம்பந்தப்பட்ட துறைக்கும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் பெரும்பாலான குடும்பங்கள் மின் இணைப்பின்றி மெழுகுவர்த்தியை நம்பி வாழ்க்கை நடத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் அடிப்படை வசதிகளின்றி உள்ளதால் பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் நடமாடுவதால் அச்சத்தில் குடியிருந்து வருகின்றனர்.

இது குறித்து பேசிய குடியிருப்பு வாசிகள், குழந்தைகளுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்க வருவாய்த்துறை சார்பில் முகாம் அமைக்க வேண்டும் எனவும், மின் இணைப்பின்றி இருக்கும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கவும், குடியிருந்து வரும் வீட்டிற்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

































































































