சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்துக்கு சென்றதால், ஏற்கனவே தவெக வுடன் இனக்கமாக உள்ள வேலுமணி, சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்டோர், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையை மாற்ற வேண்டும். பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்.பி கேசி பழனிச்சாமி, கட்சியின் நலன் கருதி வேலுமணி சிவி சண்முகம் உள்ளிட்டோர் கட்சியை அழிக்கும் நோக்கத்தை கைவிட்டுவிட்டு ஒன்றிணைந்து செயல்பட்டு கட்சியை காப்பாற்ற வேண்டும் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, கருத்து வேறுபாடுகள், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள், கட்சிப் பிளவுகள், வாக்குச் சிதறல்கள், எடப்பாடி பழனிசாமி யாரையும் அரவணைத்துச் செல்லாத அணுகுமுறை போன்ற காரணங்களால் அதிமுக தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறது.
ஆனால், அதற்காக வேலுமணி போன்றவர்கள் தங்கள் மீதான ஊழல் வழக்குகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், மீண்டும் ஆளும் கட்சியுடன் இணைந்து தங்களது பொருளாதாரத்தை வளப்படுத்திக் கொள்ளவும் அதிமுகவைத் தவெகவின் சார்பு இயக்கமாக மாற்ற நினைப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் மறைமுக உறவு வைத்திருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதற்காக, தவெகவுடன் உறவாட நினைப்பதும் சரியான முடிவல்ல.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள், விலகிச் சென்றவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து கூட்டுத் தலைமையின் கீழ் செயல்பட்டால் மட்டுமே, அதிமுக மீண்டும் ஆளும் கட்சியாக உருவெடுக்க முடியும்.
இதை உணர்ந்து, அனைவரும் தங்களது சுயநலன்களை மறந்து, தங்களுக்குச் செல்வாக்கையும் வாழ்வையும் அளித்த கட்சியைச் சிதைக்கும் செயல்களைக் கைவிட்டு, அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
இல்லையென்றால், தமிழக அரசியலின் எதிர்காலம் தவெக VS திமுக என்ற மாறிவிடும். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பது காலத்தின் கட்டாயம் ! என பதிவிட்டுள்ளார்.


































































































