சென்னை தியாகராயா நகரில் உள்ள அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்தில் ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ப்ளஸ்-டூ முடித்து கல்லூரியில் சேர்ந்திருக்கும் 25 மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவியும், மூத்த ஓவியர் ஒருவருக்கு நிதியும், விருதும், விளிம்புநிலை மக்களின் கல்வி மேம்பாட்டிற்காகத் தன்னலமற்று உழைத்து வரும் மூன்று முக்கிய அமைப்புகளுக்கு நிதியுதவியும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.
1979 ஆம் ஆண்டு திரைக்கலைஞர் சிவகுமாரின் 100 வது திரைப்படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்திற்காகப் பெற்ற முழுச் சம்பளமான ரூ.25,000-ஐ வங்கியில் முதலீடு செய்து, அதன் வட்டித் தொகையைக் கொண்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில், பின்னர் சிவகுமாரின் சொந்த நிதியில் இருந்து உதவித்தொகைகள் வழங்கப்பட்டன. 2006 ஆம் ஆண்டு முதல் ‘அகரம் ஃபவுண்டேஷன்’ இந்த அறக்கட்டளையின் பொறுப்பை முழுமையாக ஏற்று, ஆண்டுதோறும் உதவித்தொகைகளையும் விருதுகளையும் வழங்கி வருகிறது.
கல்வியில் சிறந்த மாணவர்களை ஊக்குவிப்பதோடு, ஓவியத் துறையில் நீண்ட காலம் சிறப்பாகப் பங்காற்றிய மூத்த கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ரூ 1 லட்சம் பரிசுத்தொகையுடன் சிவகுமார் கல்வி அறக்கட்டளை விருது வழங்கி வருகிறது. இதுவரை ஓவியர்கள் அம்புலிமாமா சங்கர், ராமு, ஜெயராஜ், மாயா, மணியம் செல்வன் ஆகியோர் பெற்றுள்ள நிலையில், இந்த 47-வது ஆண்டு விழாவில் சிறந்த ஓவியரும் கலைத்துறையின் குறிப்பிடத்தக்க ஆளுமையுமான ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ 1 லட்சம் பொற்கிழியுடன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பொருளாதாரச் சவால்களையும் பல்வேறு தடைகளையும் கடந்து, பிளஸ் டூ பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் சேர்ந்துள்ள 25 மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ 10,000 வீதம் மொத்தம் ரூ 2,50,000 கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. மாணவர்களின் சாதனையைப் பாராட்டி, அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் திரைக்கலைஞர் சூர்யா பேசியதாவது, இது ஒரு குடும்ப நிகழ்ச்சி. இது வந்து 47 வயசுன்னா வந்து வீட்ல எப்படி ஒரு பிறந்தநாள் நடக்குமோ, அந்த மாதிரி ஒவ்வொரு முறையும் இது குடும்ப நிகழ்ச்சியா மட்டுமே தான் பார்க்கிறோம். ஒவ்வொரு முறையும் இந்த குடும்பம் இன்னும் விரிவடைந்துகொண்டே தான் இருக்குது. இங்க வந்திருக்கிற, மாணவ, மாணவிகள் அவங்களோட சாதனைகளைச் சொல்லி, ஒரு ஒரு வாட்டியும் பரிசு எடுத்துட்டு போகும்போது, எவ்வளவு விஷயங்கள் தாண்டி வந்திருக்காங்க, எவ்வளவு விஷயங்கள் கடந்து வந்திருக்காங்க அப்படின்னு பிரம்மிப்பா பார்க்கிறேன். அப்பாவோட வழிகாட்டுதல் தான். இவ்வளவு வருஷத்துக்கு அப்புறமா வந்து இதை எடுத்துட்டு போக முடியுது. இது ஒரு உணர்வு. இப்படித்தான் நாங்க வளர்க்கப்பட்டிருக்கோம். இப்படித்தான் வந்து எங்களை எல்லா விஷயத்தையும் இங்க கண் முன்னாடி வந்து நிப்பாட்டி இருக்காங்க.
அகரம் வந்து 20 வருஷம் கடந்தாச்சு. கிட்டத்தட்ட முதல் தலைமுறை மாணவர்கள், மாணவிகளோட குடும்பத்துல ஒரு 7,000 பேரை எங்களால வந்து தொட முடிஞ்சிருக்கு. இன்னும் இன்னும் இன்னும் பல விஷயங்கள் வந்து அகரம் மூலமா நடந்துட்டே இருக்குது. இன்னும் வந்து அதோட எடுத்துக்கிட்ட நோக்கம் வந்து குறையாம இருந்திருக்குது. இன்னும் அது இன்னும் சிறப்பா நடந்துட்டு இருக்கு அப்படின்னா, அதுக்கு முக்கியமா வந்து கல்யாணி ஐயா மாதிரி முக்கியமானவங்க வந்து நம்ம கூடவே கை கோர்த்து நின்னுட்டு இருக்காங்க. சமூகப் பார்வைனா என்ன? யாருக்காக பண்ண போறோம்? எதுக்காக பண்ண போறோம்? அப்படிங்கிற மறுபடியும் மறுபடியும் அவங்க வச்ச கேள்விகள், நம்ம கூட இருக்கிற வழிகாட்டிகளும் சரி, மாணவர்களும் சரி, இப்ப அகரமை முன்னெடுத்துட்டு போற முன்னாள் மாணவர்கள் அத்தனை பேருக்கும் அந்த பார்வையை சரியா பாத்துக்கிட்டது வந்து இவங்கள மாதிரி நிறைய வழிகாட்டிகள் தான். அதனாலயே எங்க ஆரம்பிச்சமோ, அங்க மட்டுமே அதை மட்டுமே பண்ணிராம, இன்னும் யார் யாருக்குத் தேவை? இன்னும் யார் யார் தேவைப்படும் குழந்தைகள்? இன்னும் யாரை எல்லாம் கை பிடிச்சு கூட்டிட்டு வரணும் அப்படின்னு தேடும்போது வந்து, நிறைய இஸ்லாமிய சமூகத்திலும் சரி, நிறைய மாணவிகள் நிறைய கல்வி இடைநிற்றல் எல்லாம் இருக்காங்க அப்படிங்கிறது தெரிய வந்துச்சு. அங்க போய் சில வேலைகள் பண்ண முடிஞ்சுச்சு. மலைக் கிராமத்துல போய் வேலைகள் பண்ண முடிஞ்சது. கடலோர பகுதிகளில் வேலைகள் பண்ண முடிஞ்சது. அதுமாதிரி தேவைகள் அப்படின்னு பார்த்தா இன்னும் ஏராளமா இருக்கு.

2006-ல மாணவர் பத்திரிகையாளரா அறிமுகம் ஆன ஞானவேல் கேட்ட அந்த ஒரே கேள்விதான்: “முதல் தலைமுறை மாணவர்கள் இன்னும் இருக்காங்க. 12 ஆம் வகுப்பு எக்ஸாமை ஒரு மலைக் கிராமத்துல இருக்கிற ஒரு மாணவியும் எழுதுறாங்க, ஒரு மீனவ கிராமத்துல இருந்து ஒரு மாணவி எழுதுறாங்க. அங்க பல பகுதிகளில் ஆசிரியரே கிடையாது. ஆனா எல்லாரும் ஒரே பரீட்சைதான் எழுதுறாங்க. அவங்களை நீங்க பார்க்கிறீங்களா? அவங்க இருக்காங்கன்னு தெரியுமா? அதுலயும் முதல் தலைமுறை மாணவர்கள் இருக்காங்கன்னு தெரியுமா?”ன்னு ஒரு கேள்வி கேட்டாரு. ஏன் எங்க அப்பா வந்து அப்போ 60-ல 50-ல எல்லாம் வந்து மெட்ராஸ்க்கு கிளம்பி வந்தாங்க. நீங்க சொல்றது எல்லாம் வந்து 50 வருஷத்துக்கு முன்னாடிங்க. இப்ப எல்லாம் எங்க முதல் தலைமுறை மாணவர்கள் இருக்காங்க? அப்படின்னு சாதாரணமா பேசினோம். “இல்லைணா, முதல் தலைமுறை மாணவர்கள் இருக்காங்கணா” அப்படின்னு 2006-ல சொன்னாரு. இப்ப 2026. இப்போதும் முதல் தலைமுறை மாணவர்கள் வந்து படிச்சு வெளியில வந்துட்டு இருக்காங்க. அகரம் அவங்களை தேடி போயி, அவங்களை வெளியில கொண்டு வந்து, யார் யாருக்கு உதவி தேவைப்படுதோ அவங்க கேட்கக் கூட வேண்டாம், அகரம் அங்க போய் அவங்களை வெளியில கூட்டிட்டு வந்து, அவங்களுக்கு வந்து இந்த உலகத்தை, இந்த வெளிச்சத்தைக் காமிக்குதுன்னு நினைக்கும்போது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுக்கு அத்தனை பேருக்கும் நான் நன்றியை சொல்லிக்கிறேன்.
சினிமாலயே வந்து கிட்டத்தட்ட இப்போ 28, 29 வருஷம் ஆகப்போகுதுன்னு சொல்றாங்க. சினிமால இருந்து நான் கத்துக்கிட்ட விஷயத்தை உங்களுக்கு சொல்லணும்னு பார்க்கிறேன். சினிமால வந்து ‘ரீடேக்ஸ்’ (Retakes) அப்படின்னு சொல்லுவாங்க. ஒரு காட்சி வந்து ஒரே ஷாட்ல முடியறது கிடையாது. சில டைம் அஞ்சு டேக், ஆறு டேக் ஆகும். ஷாட் நல்லா வரணும் அப்படிங்கிறதுக்காக 18, 30 வாட்டி கூட ‘ரீடேக்ஸ்’ போவோம். ஒரு ஒரு வாட்டியும் அது தப்பாகும்போது டைரக்டர் வந்து “நீ ஃபெயில்” அப்படின்னு சொல்ல மாட்டாரு. “ஒன் மோர்” அப்படிம்பாரு. நான் டைரக்டரை வந்து வாழ்க்கையா பார்க்கிறேன். வாழ்க்கை எப்பவுமே உங்களை ஃபெயில்னு சொல்றது கிடையாது. நீங்க அப்படி நினைச்சுக்கலாம், ஆனா வாழ்க்கை அப்படி கிடையாது. நீங்க எப்பவுமே வாழ்க்கைக்கிட்ட “இன்னொரு வாட்டி பண்ண போறேன், ஒன் மோர்”னு சொல்லுங்க. “இன்னொரு வாட்டி பண்ண முடியும்”னு சொல்லுங்க. அது உங்களோட மார்க்கா இருக்கலாம், இல்லாட்டி காலேஜ்ல சேர்ற ஒரு சீட்டா இருக்கலாம், இல்லாட்டி நீங்க போற முதல் வேலையா இருக்கலாம். உங்களுக்கு திருப்தியா இல்லாட்டி அதுவே கடைசி கிடையாது, அதுவே முடிவு கிடையாது. நீங்க சொல்ல வேண்டிய ஒரே விஷயம் “ஒன் மோர்”. இன்னொரு வாட்டி அதை சரி பண்ண முடியும், இன்னொரு வாட்டி இன்னொரு சான்ஸ் எடுத்துக்க முடியும், அதை இன்னும் மேம்படுத்த முடியும். So, there is always “one more” அப்படிங்கறதை வந்து ஞாபகம் வச்சுக்கோங்க. எதுவுமே முடிவு கிடையாது அப்படிங்கிறதை தயவுசெஞ்சு மறந்துடாதீங்கன்னு சொல்லுவேன்.
இன்னொன்னு ரிஹர்சல்ஸ் (Rehearsals). நீங்க ஒரு ரெண்டரை மணி நேரம் படம் பார்த்துடுறீங்க, ஆனா கைதட்டலே வாங்காத பல வாட்டி வந்து அந்த விஷயத்தை நாங்க வந்து ரிஹர்ஸ் பண்ணிருப்போம். பல வாட்டி ரிஹர்சல் போயிட்டே இருப்போம், அதுக்கெல்லாம் கைதட்டல் எல்லாம் கிடையாது. சோ, அதுதான் வந்து உங்களை உருவாக்குறதுன்னு நான் சொல்லுவேன். அந்த ரிஹர்சல்ஸ் ரொம்ப ரொம்ப முக்கியம். நமக்கு என்ன ரொம்ப பிடிக்குமோ அதுக்கு முழு மனசோட, முழுசா சரண்டர் ஆகி பண்ணிட்டே இருந்தா என்ன முடியாதோ அதை நாம பண்ண முடியும். நீங்க எடுத்த உடனே வந்து ஒரு ஒரு சின்ன கலையோட, ஒரு ஸ்கில்லோட வந்து வரணும் அப்படிங்கிறது அவசியம் கிடையாது. அது வந்து ஒரு ‘கன்சிஸ்டன்சி’ (Consistency) அப்படின்னு சொல்லுவாங்க. திரும்ப திரும்ப திரும்ப திரும்ப ஒரு விஷயத்தை பண்ணா அதுல நம்ம வந்து மேம்பட முடியும், அதுல முதன்மையா வர முடியும். அது வந்து ஒரு கோடிங்கா (Coding) இருக்கலாம், இல்லாட்டி டிராயிங்கா (Drawing) இருக்கலாம், அல்லது ஓட்டப் பயிற்சியா இருக்கலாம், வேறு எதுவா வேணாலும் இருக்கலாம். கன்சிஸ்டன்சி திரும்ப திரும்ப திரும்ப அதை ரிஹர்சல்ஸ் பண்ணும்போது அதுதான் நம்ம உருவாகுற இடம் அப்படின்னு நான் சொல்லுவேன். எல்லாத்துக்குமே ஒரு முதல் படின்னு ஒன்னு இருக்குது. நான் சினிமாக்கு வரும்போது நடிக்கவெல்லாம் தெரியாது, எதுவுமே தெரியாது. திரும்ப திரும்ப பண்ண ரிஹர்சல்ஸ்தான் இங்க 29 வருஷத்துக்கு அப்புறமா நிக்க வச்சிருக்கு. என்னால வர முடியும்னா நீங்க எதுல எல்லாம் ஆசைப்படுறீங்களோ அது எல்லாத்துலயும் உங்களால வர முடியும்.

படம் முடிஞ்சதுக்கு அப்புறமா ஒரு கிரெடிட்ஸ்னு வந்து எவ்வளவு பேர் அந்த படத்துக்காக வேலை செஞ்சிருக்காங்க அப்படிங்கிறது அவங்களோட பேரோட வரும். ஒரு ஹீரோங்கிறது தனியா நான் அப்படியே நடந்து அப்படியே வெளியில வந்துறது இல்லை. அவ்வளவு உதவி இயக்குநர்கள் இருப்பாங்க, எழுத்தாளர்கள் இருப்பாங்க, காஸ்ட்யூம்ஸ் இருப்பாங்க, மேக்கப் இருப்பாங்க, டிரைவர்ஸ் இருப்பாங்க, ஆயா இருப்பாங்க, லைட்மேன் இருப்பாங்க. இவங்க எல்லாரோட உழைப்பின் மூலமாதான் வந்து ஒருத்தனால வெளியில வர முடியுது.
நம்ம ஒரு வாழ்க்கையில மேல வந்துட்டோம் அப்படின்னா வெறும் ரீல்ஸை மட்டும் பார்க்காம, பக்கத்துல லெஃப்ட்ல, ரைட்ல நம்ம கூட யார் இருந்திருக்காங்க? நம்ம இங்க வர்றதுக்கு யார் உதவியா வந்திருக்காங்க? நமக்கு யார் நமக்கு இந்த அடையாளத்தைக் கொடுத்திருக்காங்க அப்படிங்கிற அவங்களை மறந்துட வேண்டாம். அவங்களை தயவுசெஞ்சு ஞாபகம் வச்சுக்கோங்க. அதே மாதிரி ஒரு இடத்துக்கு வந்ததுக்கு அப்புறமா, நம்ம ஒருத்தரையாவது மேல உயர்த்தணும். அவங்களோட கிரெடிட்ல வந்து நம்ம பெயர் இருக்கணும்.
நீங்க இன்ஸ்டாகிராம், அதாவது ரீல்ஸ் (Reels) பார்த்துட்டு இருந்தீங்கன்னா அந்த ரீல்ஸ்ங்கிறது ஒரு கதைதான். அதனால வந்து நம்ம ஒண்ணுமே கத்துக்க போறதே கிடையாது. யாரை ஃபாலோ பண்றோம் அப்படிங்கிறது ரொம்ப முக்கியம். கனவு உலகமா பார்த்துட்டு இருந்தீங்கன்னா, அந்த கனவு உலகத்துலயே தான் நாம இருப்போம். எலான் மாஸ்க் எங்கிருந்து ஆரம்பிச்சாரு? 24 மணி நேரத்துல 23 மணி நேரம் வேலை செய்வாராம். ஒரு மணி நேரம் தான் வந்து தூங்குவாராம். அந்த மாதிரி எங்கிருந்து ஆரம்பிச்சாங்க? ஆரம்பிச்ச பயணம் எங்கிருந்து இங்க வந்தாங்க அப்படிங்கிறதை வந்து வெறும் ரீல்ஸ் மட்டும் பார்க்காம, நிறைய பாட்காஸ்ட் (Podcast) இருக்கும், அவங்களை பத்தின நிறைய ரிசர்ச் வொர்க் இருக்கும், அதெல்லாம் எடுத்துக்கிட்டீங்கன்னா, உங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும். உங்கக்குள்ள இருக்கிற டேலன்ட்டை (Talent) வெளியில எடுத்துட்டு வர்றதுக்கு அவை உதவும்.
சினிமால இருந்து நான் கத்துக்கிட்டது மறுபடியும் ‘ரீடேக்’—ஒன் மோர் கேளுங்க, ‘ரிஹர்சல்’ பண்ணுங்க, ‘கிரெடிட்ஸ்’—நம்ம யாருக்காக எதுனால இங்க வந்தோமோ, எதுனால இவ்வளவு தூரம் வந்தோமோ அதை மறந்துட வேண்டாம். So, always ask for one more அண்ட் ஒருத்தரையாவது நாம் மேல உயர்த்தறதுக்கு முயற்சி பண்ணுவோம். வாழ்க்கை ரொம்ப ரொம்ப அழகானது, நம்புங்க. என்ன நினைக்கிறீங்களோ அதுவாவே நாம் ஆக முடியும். ரொம்ப ரொம்ப நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள், கலைஞர்கள், மாணவ, மாணவியர், அகரம் ஃபவுண்டேஷன் தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


































































































