ரியா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் திருமாறன் தயாரிப்பில், அசோக், யுகன், சங்கவி, நிஷா, சிமுஅத்வானி, அரவிந்த் ராஜ், ஓய்ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில், நெடுமாறன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “கிட்டி”.
கதைப்படி.. ஆட்டோ ஓட்டுநர் விஜய் ( அசோக் ) காவல்நிலையத்தில் கையில் கத்தியுடன் தான் இரண்டு கொலைகளை செய்ததாகக் கூறி சரணடைகிறான். அதாவது தன்மீது தாக்குதல் நடத்திய ரவுடி, தான் காதலித்த பூஜா ( சங்கவி ) இருவரையும் ஒரே கத்தியால் குத்தி கொன்றதாக, காவல்நிலைய ஆய்வாளர் யுகனிடம் கூறுகிறான். இவனது வாக்குமூலத்தில் சந்தேகம் அடைந்த ஆய்வாளர் இந்த வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்துகிறார்.

மனநல மருத்துவர் அரவிந்த் ராஜிடம் விஜய் பற்றி விசாரிக்கும் போது, அவன் ஏற்கனவே ஒரு கொலை செய்திருப்பதாகவும், அவனுக்கு வித்தியாசமான மனநோய் இருப்பதாகவும் கூறுகிறார். இதன் பின்னணியில் பல மர்மங்கள் மறைந்திருப்பதும் ஆய்வாளருக்கு தெரியவருகிறது.
அடுத்தடுத்து நடந்த கொலைகளுக்கான உண்மையான காரணங்கள், அதன் பின்னனி என்ன ? என்பது மீதிக்கதை..

சமூகத்தில் நடைபெறும் சம்பவங்களை, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சொல்ல நினைத்த இயக்குநர், திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
நாயகனாக நடித்துள்ள அசோக் தனது கதாப்பாத்திரத்தை உணர்ந்து, இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், சில இடங்களில் நாடகத் தன்மை வெளிப்படுகிறது. காவல் ஆய்வாளராக நடித்துள்ள யுகன் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
மற்றபடி படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.


































































































