ஒன்றிய-மாநில உறவுகள் உயர்நிலைக் குழுவைக் கலைத்துள்ளது தவெக அரசு.
சிறப்புக் கவனமும் தீவிர ஆய்வும் தேவைப்படும் விவகாரத்தில்
தவெக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் ( பொறுப்பு ) அச. உமர் பாரூக் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு, மாநிலங்களின் சுயாட்சி உரிமைகள், நிதிப் பங்கீடு மற்றும் ஆளுநர்களின் தன்னிச்சையான செயல்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழுவைக் கலைத்து தமிழ்நாடு அரசு (தவெக) வெளியிட்டுள்ள உத்தரவு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அரசின் இந்த நடவடிக்கை கண்டனத்திற்குரியது.
மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் மாநில உரிமை பறிப்புகளுக்கு எதிராகவும், மாநிலங்களின் சுயாட்சியைப் பாதுகாக்கவும் இத்தகைய வல்லுநர் குழுக்களின் ஆய்வுகளும் பரிந்துரைகளும் மிக மிக அவசியமானவை ஆகும். தொகுதி மறுவரையறை, கல்வியில் மாநில உரிமை, ஜி.எஸ்.டி வரிப் பகிர்வு, மாநிலங்களின் நிதிச் சுதந்திரம் உள்ளிட்ட மிக முக்கிய சவால்களை மாநிலங்கள் எதிர்கொண்டு வரும் இந்தச் சூழலில், அக்குழுவின் பணிகளை முழுமையாக நிறைவு செய்ய விடாமல் பாதியிலேயே கலைப்பது மாநில உரிமைகளைப் பலவீனப்படுத்தும் செயலாகும்.
சட்டப்பூர்வமான அமைப்பு அல்ல என்ற காரணத்தைக் கூறி இக்குழுவைக் கலைப்பதும், மாநில சட்ட ஆணையமே இப்பணிகளை மேற்கொள்ளும் எனக் கூறுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத சாக்குப்போக்காகும். சிறப்புக் கவனமும் தீவிர ஆய்வும் தேவைப்படும் ஒரு விவகாரத்தை பொதுவான அமைப்பிடம் ஒப்படைப்பது அதன் முக்கியத்துவத்தைக் குறைத்துவிடும்.
எனவே, மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலும், மத்திய – மாநில உறவுகளில் மாநிலங்களின் சுயாட்சியை வலுப்படுத்தும் நோக்கிலும் கலைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவை உடனடியாக மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.




































































































