இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் பி. டி. உஷா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் செயலாளருக்கு கராத்தே விளையாட்டில் நடைபெற்றுவரும் முறைகேடுகள் குறித்தும், கராத்தே அமைப்புகளின் பதிவுகளை விரைவாக ரத்து செய்வதற்கும், இந்தியாவில் கராத்தே நிர்வாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அவசர நடவடிக்கை எடுப்பதற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் பல்வேறு கராத்தே அமைப்புகளின் பதிவு மற்றும் செயல்பாடுகள் தொடர்பாகவும், விளையாட்டின் நிர்வாகத்தில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மையைத் தீர்ப்பதற்கு, அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், 11 மார்ச் 2026 அன்று அனுப்பிய தனது முந்தைய கடிதத்தின் தொடர்ச்சியாக இக்கடிதத்தை எழுதுவதாக குறிப்பிட்டுள்ளார்.


சமீபத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் போது, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பிரதிநிதிகள், உலக கராத்தே சம்மேளனத்தின் (World Karate Federation – WKF) அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். அப்போது இந்தியாவில் கராத்தே விளையாட்டின் தற்போதைய நிலை குறித்து உலக கராத்தே சம்மேளன அதிகாரிகள் தங்களது கவலையை மீண்டும் தெரிவித்துள்ளனர். மேலும், கராத்தே இந்தியா அமைப்பு (Karate India Organisation – KIO) இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அமைப்பாக இருப்பதால், அந்த அமைப்புக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் ஆதரவும் இருப்பதாக சர்வதேச அளவில் புரிந்து கொள்ளப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தியாவில் நடைமுறையில் உள்ள சட்டங்களின் கீழ் ஓர் அமைப்பு பதிவு செய்யப்படுவது என்பது, இந்திய அரசால் தேசிய விளையாட்டு சம்மேளனமாக அங்கீகரிக்கப்படுவதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். இருப்பினும், KIO அமைப்பு பதிவு செய்யப்பட்டிருப்பது, அந்த அமைப்புக்கு அமைச்சகத்தின் ஆதரவு அல்லது ஒப்புதல் இருப்பதாக சர்வதேச விளையாட்டு அதிகாரிகளிடையே ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இது இப்பிரச்சினையை மேலும் சிக்கலாக்குவதுடன், இந்தியாவின் ஒழுங்குமுறை நிலைப்பாட்டை சர்வதேச அளவில் தெளிவாக எடுத்துரைப்பதையும் கடினமாக்குகிறது.

உலக கராத்தே சம்மேளன அதிகாரிகளுடனான கலந்துரையாடல்கள், இப்பிரச்சினையை உடனடியாகத் தீர்க்க வேண்டியதன் அவசரத் தேவையை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளன. பல கராத்தே அமைப்புகள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருவதும், அவற்றின் நிலை மற்றும் அதிகாரம் குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுவதும், இந்த விளையாட்டிற்கோ அல்லது அதன் விளையாட்டு வீரர்களுக்கோ நன்மை பயப்பதல்ல. மேலும், தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துதல், விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்தல் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துதல் ஆகியவற்றிலும் குழப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்பை இது உருவாக்குகிறது.

நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் அனைத்து கராத்தே அமைப்புகளின் பதிவுகள் தொடர்பான பிரச்சினையை முன்னுரிமை அடிப்படையில் எடுத்துக்கொண்டு, உரிய சட்டங்களின்படியும், தகுதியுள்ள அதிகாரிகள் மூலமாகவும், அந்தப் பதிவுகளை விரைவில் ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய குழப்பமான நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், இந்தியாவில் கராத்தே விளையாட்டை நிர்வகிப்பதற்கான தெளிவான மற்றும் சட்டரீதியாக நிலையான கட்டமைப்பை ஏற்படுத்தும் வகையிலும், தேவையான நடவடிக்கைகளை மேலும் தாமதமின்றி தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அமைச்சகம் விரைவாகத் தலையிட்டு நடவடிக்கை எடுப்பது, உலக கராத்தே சம்மேளனம் (WKF), ஆசிய கராத்தே சம்மேளனம் மற்றும் பிற சர்வதேச விளையாட்டு அமைப்புகளுக்கு ஒரு தெளிவான செய்தியை வழங்கவும் உதவும். அதாவது, பொதுவான சட்டங்களின்கீழ் ஓர் அமைப்பு பதிவு செய்யப்படுவதை, தேசிய விளையாட்டு சம்மேளனமாக அரசாங்க அங்கீகாரம் பெற்றதாகக் கருதக்கூடாது என்பதே அந்தச் செய்தியாகும்.

இது இந்திய கராத்தே விளையாட்டின் சர்வதேச அந்தஸ்து குறித்த தெளிவை அதிகரிப்பதுடன், பல்வேறு அமைப்புகள் அதிகாரம் கோருவதால் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் நிச்சயமற்ற தன்மையிலிருந்தும் அவர்களைப் பாதுகாக்கும். இந்தப் பிரச்சினைக்குச் சட்டபூர்வமான மற்றும் நீடித்த தீர்வைக் கண்டறிவதில் அமைச்சகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க இந்திய ஒலிம்பிக் சங்கம் உறுதி பூண்டுள்ளது.
இந்தியாவில் கராத்தே விளையாட்டு, முறையாக அங்கீகரிக்கப்பட்ட மற்றும் விதிமுறைகளுக்கு இணங்கச் செயல்படும் தேசிய விளையாட்டு சம்மேளனத்தின் கீழ் நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்வதே இதன் இறுதி நோக்கமாகும். இவ்விஷயத்தில் தாங்கள் நேரடியாகத் தலையிட்டு, விரைவான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது இணையத்தில் வலம் வரும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அறிவிப்பு பெற்றோர்களிடயே பெரும் அதிர்ச்சியை ஏற்பாடுத்தியுள்ளது.




































































































