மீரா கதிரவன் இயக்கத்தில் உருவான ‘ஹபீபி’ திரைப்படம், தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காதல் மற்றும் குடும்பப் பின்னணியிலான திரைப்படமாகும். ரோமியோ பிக்சர்ஸ், நேசம் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜிகேஎஸ் பிரதர்ஸ் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் கஸ்தூரி ராஜா, ஈசா, மாளவிகா மனோஜ், தனஸ்ரீ சுதாகரன், அனுஸ்ரேயா ராஜன், அருள்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

1980-களில் தொடங்கி நிகழ்காலம் வரை ஒரு குடும்பத்தின் வாழ்க்கைப் பயணத்தைப் பதிவு செய்யும் இப்படம், தென் தமிழகத்தின் முஸ்லிம் சமூகத்தின் கலாசாரம், நம்பிக்கைகள், குடும்ப உறவுகள், காதல், ஆசைகள் மற்றும் கைத்தறி நெசவுத் தொழிலின் பின்னணியில் உருவாகும் வாழ்க்கை மாற்றங்களைப் படம்பிடித்துள்ளது. தமிழ் சினிமாவில் முஸ்லிம் மக்களின் அன்றாட வாழ்வியலை விரிவாகவும் நெருக்கமாகவும் பதிவு செய்த படைப்பாக ‘ஹபீபி’ கவனம் பெற்றுள்ளது.

திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து தற்போது சோனி லிவ் ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ள ‘ஹபீபி’ திரைப்படத்திற்கு 125 வது நாள் கிடைத்து வரும் வரவேற்பைத் தொடர்ந்து, படக்குழுவினரைப் பாராட்டும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. கில்ட் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலும் இடம்பெற்றது. திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு படக்குழுவினரைப் பாராட்டினர்.




































































































