அழகு பாண்டியன் தயாரிப்பில், ஹரிஸ், தனலெட்சுமி, கல்கி ராஜா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில், சி. பிரபுராம் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “நல்ல படம்”.
கதைப்படி.. மது பழக்கத்திற்கு அடிமையான குமரன் ( ஹரிஸ் ) முழுநேரமும் நண்பர்களுடன் குடித்து கும்மாளம் போடுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். சொந்தமாக பார் நடத்தி வருவதோடு, மருத்துவம் படிக்கும் தனலெட்சுமியை காதலிக்கிறார். இதற்கிடையில் மதுபிரியர் மறுமலர்ச்சி சங்கத்தை ஆரம்பித்து சங்கத்தின் தலைவராக செயல்படுகிறார்.

குமரனை மதுபழக்கத்திலிருந்து வெளியே கொண்டுவர அவரது தாய், சகோதரி மற்றும் காதலி ஆகியோர் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டாலும், குமரனை திருத்த முடியாமல் வேதனைப்படுகின்றனர். இவரது செயல்களால் அக்கம் பக்கத்தில் அவரது குடும்பத்தினர் அவமானப்படுகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் பூர்ண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது என அறிவிப்பு வெளியாகிறது. மதுபிரியர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். அதன்பிறகு என்னானது என்பது மீதிக்கதை..

மது பழக்கத்திற்கு உள்ளானவர்களால் அவர்களது வாழ்க்கை, குடும்பம் எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதையும், மது இல்லாத மாநிலம் எப்படி இருக்கும் என்பதையும் சமூக சிந்தனையோடு சொல்லி இருக்கிறார் இயக்குநர். ஆனால் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
நாயகன் ஹரிஸ் ஓரளவு நடித்திருக்கிறார். நாயகி தனலெட்சுமி தனது கதாப்பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல் தாயாக ரமா, சகோதரியாக, நண்பர்களாக நடித்துள்ளவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

































































































