நகைச்சுவை நட்சத்திரங்கள் யோகி பாபு, சத்யா ஆகியோர் ‘ரங்கபலி’ (Rangabali) புகழ் பவன் பாசம்செட்டி இயக்கும் காமெடி படத்தில் இணைகின்றனர். நாகார்ஜுனா ரெட்டி மற்றும் பவன் பாசம்செட்டி இருவரும் இணைந்து ட்ரீம் மூவி மேக்கர்ஸ் மற்றும் நயவாயு சித்ராலு ஆகிய பேனர்களின் கீழ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள். இரண்டு பேனர்களின் முதல் தயாரிப்பு முயற்சியாக இந்தப் படம் அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. படக்குழு டைட்டில் வெளியீட்டு கிளிம்ப்ஸை வெளியிட்டுள்ளது.
இது வழக்கமான தெலுங்கு அல்லது தமிழ்ப் படம் அல்ல, மாறாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளையும், இரண்டு திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர்களையும் ஒன்றிணைக்கும் படைப்பு.
கிளிம்ப்ஸ் ஒரு நகைச்சுவையான குறிப்புடன் தொடங்குகிறது, அதில் ஒரு தெலுங்கரும், ஒரு தமிழரும் தங்களுக்குப் பிடித்தமான உணவுகளை ரசித்து சாப்பிட்டுக்கொண்டே, தங்கள் உணவுதான் சிறந்தது என்று பெருமையாகக் கூறிக்கொள்கிறார்கள். தெலுங்கு கதாபாத்திரம் கூல் ட்ரிங்குடன் பிரியாணியை ரசிக்கிறது, அதே நேரத்தில் தமிழ் கதாபாத்திரம் சாம்பாருடன் இட்லியை ரசிக்கிறது.

எந்த உணவு சிறந்தது என இரண்டு கதாபாத்திரங்களும் வாக்குவாதத்துக்குள் செல்ல, இன்னொரு நபர் குறுக்கிட்டு இருவர் ருசிப்பதைக் காட்டிலும், அதிசுவை காம்பினேஷன் ஒன்று காத்திருப்பதாகச் சுட்டிக்காட்டும் போது காட்சியும், கொண்டாட்டமும் வேறு நிலைக்குச் செல்கிறது.
யோகி பாபு மற்றும் சத்யாவின் அறிமுகம் அதைத் தொடர்ந்து வருகிறது. இருவரும் வெள்ளை நிற உடையில் தோன்றுகின்றனர். பின்னர் இயக்குநர் கதையைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான விளக்கத்தை அளிக்கிறார். அது காதலுடன் க்ரைம் மற்றும் ஆக்ஷன் கலந்த கதை என்று வெளிப்படுத்துகிறார். அத்துடன், ‘கோல்டன் பாக்கியம்’ கிளிம்ப்ஸ் டைட்டில் வெளியீடு நிறைவடைகிறது.


































































































