தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிமுக நிறுவனர் எம்.ஜி. ராமச்சந்திரன் ( எம்ஜிஆர் ) உடன் பேசுவதுபோல் ஏ.ஐ ( AI ) வீடியோ ஒன்றை தவேக சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தது. இது சம்பந்தமாக அதிமுக முன்னாள் எம்.பி கே.சி. பழனிச்சாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அதில், இந்திய அரசியல் வரலாற்றில், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான காந்தி, நேரு, இந்திரா காந்தி போன்றோரின் படங்களை பாஜக பயன்படுத்துவதில்லை. அதேபோல், பாஜக தலைவர்களின் படங்களைக் காங்கிரஸ் பயன்படுத்துவதில்லை. கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரித் தலைவர்களின் படங்களையும் அகில இந்திய அளவில் மாற்றுக் கட்சியினர் பயன்படுத்துவதில்லை.
தமிழகத்திலும் அகில இந்தியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் இதே அரசியல் பண்பாட்டைப் பின்பற்றி வருகின்றன. எம்.ஜி.ஆரின் படத்தை திமுகவும், கருணாநிதியின் படத்தை அதிமுகவும் இதுவரை பயன்படுத்தியதில்லை. விஜயகாந்த் கூட இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை, அவர் தன்னை மட்டுமே முன்னிறுத்தினார்.
ஆனால், தன்னை மட்டுமே முன்னிறுத்தினால் அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்டு வாக்களிக்க மாட்டார்கள் என்பதால், அதிமுகவைத் தொடங்கிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை AI மூலம் சித்தரித்து, அதிகாரப்பூர்வ IT Wing பக்கத்தில் பதிவிடுவது அரசியல் மோசடியல்லவா ?
விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு, அவர் நடித்த திரைப்படங்களில்கூட எம்.ஜி.ஆரின் பெயரையோ புகழையோ பேசியதில்லை. ஜெயலலிதாவுடனும் அவருக்கு நல்லுறவு இருந்ததில்லை. விஜயின் குடும்பத்தினர் திமுக ஆதரவாளர்களாகவே கருதப்பட்டனர்.
அப்படியிருக்கும்போது, இவ்வளவு பெரிய மோசடிச் செயல்களில் ஈடுபடுவது அதிமுக தலைமையின் பலவீனமா ? அல்லது த.வெ.க.வினரின் மோசடியா ?
கள்ள லாட்டரி விற்பனையாளர்கள் மற்றும் சினிமா பிளாக் டிக்கெட் விற்பனையாளர்களின் பாணியில், வாக்குத் திருட்டில் ஈடுபடும் செயலாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது.
எது எப்படி இருந்தாலும், அதிமுக தொண்டர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதற்குத் தகுந்த எதிர்வினையாற்றி, உரிய பாடத்தைப் புகட்டுவார்கள் ! என்று பதிவிட்டுள்ளார்.


































































































