கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அமைக்கப்படும் மழை நீர் வடிகால் ஓடை பல்வேறு இடங்களில் நேரடியாக பாசன கால்வாய்களில் கலக்கும் விதத்தில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பேரூராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ஆகியோரின் அலட்சியத்தால் பாசன கால்வாய்களில் மழை நீர் புகுந்து உடைப்பு ஏற்படும் அவலங்களும் சுகாதார கேடுகளும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
தற்போது அதை நிரூபிக்கும் விதமாக சிராயன்குழி பகுதியில் இருந்து உண்ணாமலை கடை செல்லும் மாநில நெடுஞ்சாலை பகுதியில் பேரூராட்சியால் வடிகால் ஓடை கட்டப்பட்டது. அது முற்றுப்பெறாமல் மழைநீர் நிரம்பி அப்பகுதியில் குழித்துறை பாசன பிரிவு நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அட்டை குளம் கிளை கால்வாயில் கலந்து வருகிறது. மேலும் புதிதாக கட்டப்பட்ட மழை நீர் வடிகால் ஓடையில் தண்ணீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டு டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்கள் ஏற்படும் அபாயமும் அதனால் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி பாசன கால்வாய் தண்ணீர் செல்லும் இடங்களில் உள்ள விவசாயிகளும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

பெரும்பாலான பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பகுதிகளில் கழிவுநீர் சாலையில் பாய்ந்து செல்வதும் மழைநீர் வடிகால் ஓடைகளில் கலப்பதும், இதனால் அப்பகுதி மக்களுக்கு சுகாதாரக் சீர்கேடு ஏற்படுவதும் தொடர் நிகழ்வாகவே உள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம்
புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பது என்பது மெத்தன போக்காகவே உள்ளது.
இந்நிலையில் தற்போது சிராயன்குழி பகுதியில் கட்டப்பட்ட மழை நீர் வடிகால் ஓடையில் சேரும் மழை நீர் முழுவதும் அப்பகுதியில் செல்லும் அட்டைகுளம் கிளை பாசன கால்வாய்களில் கலந்து சுகாதார கேடு ஏற்படுவதுடன், பெரும்மழை காலங்களில் சாலையோரம் உள்ள மழை நீர் வடிகால் நேரடியாக பாசன கால்வாய்களில் கலப்பதால் பாசன கால்வாய் உடைந்து சேதம் ஏற்படும் நிலையும் ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் நீர்வளத்துறை அதிகாரிகள் மௌனம் காத்து வருவது பெரும் அதிர்ச்சியாகவே உள்ளது.
ஆகவே வரும் மழைக்காலத்தை கருத்தில் கொண்டு சாலையோரம் பேரூராட்சிகளால் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் ஓடையில் கலக்கும் கழிவு நீர் மற்றும் மழை நீர் ஆகியவை பாசன கால்வாயில் கலந்து பாசன கால்வாய் உடைப்பு ஏற்படுவதை தடுக்கவும் விவசாயிகளுக்கு சுகாதாரக் கேடு ஏற்படுவதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதியினரின் கோரிக்கையாக உள்ளது.


































































































