தொகுதி மறுசீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்ய உள்ள நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரி பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது சம்பந்தமாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் திமுகவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் – தமிழ்நாடுதான் எங்களுக்கு First !

அன்னை சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சகோதரி மமதா பானர்ஜி, தோழர் எம்.ஏ. பேபி, மூன்று மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் என்னைச் சந்தித்து, தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான தங்களது கோரிக்கைகளைத் தெரிவித்தனர்.
நேற்றைய தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத் தீர்மானத்தையும், தொடக்கத்திலிருந்தே நாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் புதிய மசோதாவில் இடம்பெற்றுள்ளதையும் எடுத்துரைத்தேன். அதனை ஏற்றுக்கொண்ட அவர்கள், வேறு சில பிரச்சினைகளையும் தெரிவித்தனர்.

தற்போதைய தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டால், தமிழ்நாட்டுக்கான குறைந்தபட்சப் பாதுகாப்பையும் இழந்துவிடுவோம். 2027 ஜனவரியில் அமையவுள்ள தொகுதி மறுவரையறை ஆணையத்தால் தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதைத் தடுக்க முடியாது. தற்போதைய அரசமைப்புச் சட்ட நிலையை மாற்றுவதற்கான அரசியல் வலிமையோ, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையோ நம்மிடம் இல்லை.
1971-க்குப் பிந்தைய எந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மறுவரையறை மேற்கொள்ளப்பட்டாலும், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவமும் தென் மாநிலங்களின் அரசியல் வலிமையும் குறையும்.

தென் மாநிலக் கட்சிகளுக்கு இது வாழ்வா, சாவா போராட்டம் ! இதனைத் தடுக்க, தற்போதைய மசோதாவை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. என்னைச் சந்தித்த கட்சிகளிடமும் மாற்றுத் திட்டம் இல்லை.
நாடாளுமன்றத்தில் எங்களுக்குள்ள வலிமையைக் கொண்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டின் அரசியல் வலிமையைப் பாதுகாத்திருக்கிறோம். இதில் Risk எடுக்கவோ, உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கவோ முடியாது !

பேரறிஞர் அண்ணா தொடங்கி, தலைவர் கலைஞர், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வரை தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், மாநில உரிமைகளுக்காகவும் போராடுவோம் ! வெற்றி பெறுவோம் !
அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் எங்களுக்கு ஒரே நிலைப்பாடுதான் ! தமிழ்நாடுதான் முதன்மை ! என பதிவிட்டுள்ளார்.




































































































