ஒன்ஸ் ஸ்டெப் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர் மோகனா தயாரிப்பில், துஷ்யந்த் ஜெயபிரகாஷ், ஜனனி, ஜெயபிரகாஷ், செந்திகுமாரி, சுப்பிரமணிய சிவா, விணோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், ஆர் மோகனா, சத்யா, சரத் லோகித்ஷவா, அருவி மதன் உள்ளிட்டோர் நடிப்பில், மைதீன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ஆல்பாஸ்”.
கதைப்படி.. வடசென்னை சத்யா நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் மூன்று குடும்பங்கள், தனித்தனி வீடுகளில் வசித்தாலும் ஒரே கூட்டுக் குடும்பம் போல் வசித்து வருகின்றனர். அவர்களுக்குள் எந்தவித நல்லது, கெட்டது எதுவானாலும் குடும்ப தலைவர் அழகர் ( ஜெயபிரகாஷ் ) பேச்சுக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள். ஒற்றுமையாக, சந்தோஷமாக வாழ்ந்துவரும் இவர்களது வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஐந்து கோடி பணம் இவர்களது மகன்கள் மூலம் வீட்டிற்குள் வருகிறது.

ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் பார்க்க முடியாத பணத்தைப் பார்த்ததும், பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து விட்டு சந்தோஷமாக ஆடம்பரமாக வாழலாம் என மனக்கோட்டை கட்டுகிறார்கள். ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் ஆபத்தையும் அவர்கள் உணர்கிறார்கள். அப்பகுதி எம்எல்ஏ ஆவுடையப்பன் ( சரத் லோகித்ஷவா ) பணத்தைத் தேடி அப்பகுதி கவுன்சிலர் கர்ணா ( சத்யா ) மூலம் பணத்தை தேட ஆரம்பிக்கிறார். வீட்டிற்குள் வந்த பணத்தை இழந்து விடக்கூடாது என்கிற பேராசையுடனும், எம்எல்ஏ ஆட்களிடம் சிக்கிவிடக்கூடாது என்கிற பயத்துடனும் தவிக்கிறார்கள்.
இதற்கிடையில் பல வருடங்களாக ஒன்றாக சந்தோஷமாக வாழ்ந்துவந்த குடும்பங்களுக்கிடையே பணத்தை பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சினை ஏற்பட்டு குடும்பங்கள் பிரிகிறது.

பிரிந்த குடும்பங்கள் இணைந்தார்களா ? பணம் என்னானது ? என்பது மீதிக்கதை..
ஒன்றாக அன்பு பாசத்துடன் சந்தோஷமாக வாழ்ந்துவரும் குடும்பங்களுக்கிடையில் பணம் வந்ததும் எவ்வாறு விரிசல் உருவாகிறது என்பதையும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலையும் அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
ஜெயபிரகாஷ் தனது அனுபவமான நடிப்பால் படத்திற்கு வலு சேர்த்துள்ளார். அதேபோல் துஷ்யந்த், ஜனனி இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
செந்திகுமாரி, விணோதினி, சுப்பிரமணிய சிவா, மோகனா, பிரசன்ன பாலச்சந்திரன், லோகித்ஷவா, சத்யா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.


































































































