ஸ்டார் ஸ்டூடியோ18, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ், சினி 1 ஸ்டூடியோஸ் புரொடக்சன்ஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், அஜய் கோஷ், அர்ஜூன் சிதம்பரம், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “பத்தா”.
கதைப்படி.. 1986 காலகட்டத்தில் சென்னையை அடுத்த காலாப்பட்டு பகுதியில் சாராய கடை நடத்தும் பத்தா ( விஜய் சேதுபதி ) அப்பகுதியில் யார் என்ன சொன்னாலும் அவர்களை அடித்து துவம்சம் செய்வதோடு, தன்னை மீறி யாரும் இல்லை என்கிற ஆணவத்தோடு சுற்றித்திரிகிறார். மனைவியையும் ( லிஜோமோல் ஜோஸ் ) மதிக்க மாட்டார். ஆனால் தன் மகள் மீது மட்டும் அதிகளவில் பாசத்தை காட்டுவார்.

இவர் ஒருநாள் மார்கெட் பகுதியில் ஒருவரை அடித்து துவம்சம் செய்யும் போது, ஊரே கூடி நின்று வேடிக்கை பார்க்கிறது. அடி வாங்குபவரின் மனைவியையும், மகளும் கூறுகின்றனர். அந்த கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 8 வயது சபரி என்கிற பையனும், பயந்து மறைந்து நின்று பார்கிறான். பத்தா ஈவு இரக்கமற்ற ரவுடி என்பது அவன் மனதில் பதிகிறது. அதன்பிறகு சிலநாட்கள் கழித்து இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கும்போது பூதாகரமான பிரச்சினை உருவெடுக்கிறது. அதன்பிறகு என்னானது என்பது மீதிக்கதை..

மிகப்பெரிய பிம்பமாக அனைவரும் வியந்து பார்க்கும் ஒருநபர், ஒரு சாதாரண நபரால் பிரச்சினையால் சிக்கி, தன்னை உணரும் தருணத்தில் அவன் மனதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். கடந்தகால கதைக்கு ஏற்றவாறு உடை, தோற்றம், இடங்கள் என அனைத்தும் கச்சிதமாக பொருந்தும் வகையில் அமைந்துள்ளது.

நாயகன் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் இருவரும் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். சிறுவன் சபரி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறான். படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
விஜய் சேதுபதியின் ஃபிளாஷ் பேக் காட்சிகளை குறைத்திருக்கலாம். மற்றபடி குடும்பத்துடன் முகம் சுளிக்காமல் பார்க்கக்கூடிய படம் “பத்தா”.


































































































