திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மண்டு காளியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்துள்ளனர். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் உடுமலை சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெய்க்காரப்பட்டி ஶ்ரீ மண்டு காளியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த நிலையில், பக்தர்களின் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. கோவில் நிர்வாகத்தின் சார்பில் உரிய தடுப்புகள் (Barricades) அமைக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

மேலும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த போதிய போலீசாரும் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக, தீமிதிக்கும் திடலில் திடீரென பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். கூட்ட நெரிசல் காரணமாக நெய்க்காரப்பட்டியிலிருந்து உடுமலை செல்லும் முக்கிய சாலையில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதனால் காலையில் பள்ளிக்குச் சென்ற குழந்தைகளும், பள்ளி பேருந்துகளும், பொதுமக்களும் நீண்ட நேரம் நெரிசலில் சிக்கி கடும் அவதிக்குள்ளாகினர்.

இதுசம்பந்தமாக பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இனிவரும் காலங்களிலாவது பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், போக்குவரத்துப் பாதிப்பைத் தவிர்க்கவும் கோவில் நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



































































































