திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள பாப்பம்பட்டியைச் சேர்ந்தவர் முருகவேல். இவர் தமது முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த பழைய வாள் ஒன்றை பழனி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்துள்ளார்.
அந்த வாளை ஆய்வு செய்த அருங்காட்சியகக் காப்பாட்சியர் திருமதி சசிகலா, தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி ஆகியோர் கூறுகையில்… இந்த வாள் இரும்பினால் செய்யப்பட்டது. பண்டைய நாட்களில் போருக்குப் பயன்படுத்தப்பட்ட இந்த வாள் மிகவும் துருப்பிடித்த நிலையில் காணப்படுகிறது. வாளின் எடை 1.110 கிலோவாகவும், வாளின் நீளம் 77 செ.மீ ஆகவும், நடுப்பகுதியில் 3 செ.மீ அகலமாகவும் உள்ளது. கைப்பிடி வேலைப்பாடுகளுடன் கூடியதாகவும் வாளின் மேல் பகுதி சற்றே வளைந்த நிலையிலும் காணப்படுகிறது. இது ஒருபுறம் மட்டும் வெட்டும் வகையில் கூர்மைப் படுத்தப்பட்டுள்ளது.

வாளின் வடிவமைப்பைக் கொண்டு இந்த வாள் கி.பி.17 அல்லது 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதமுடிகிறது. வாள் கிடைத்த பாப்பம்பட்டி ஊரானது பண்டைய நாட்களில் இரட்டையம்பாடி பாளையப்பட்டு – ஜமீன் பகுதிக்கு உட்பட்டு இருந்தது. பின்னாட்களில் இரட்டையம்பாடி நெய்க்காரபட்டி ஜமீனுடன் இணைந்தது. இந்த வாளுக்கும் இரட்டையம்பாடி ஊருக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.



































































































