திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மலைக்கிராமங்களில் கஞ்சா மற்றும் கள்ளச்சாராய நடமாட்டத்தைத் தடுக்கும் வகையில், காவல்துறையினரும் வனத்துறையினரும் இணைந்து அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி. வினோதினி தலைமையில், மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ஆறுமுக நயினார், பழனி தாலுகா நிலைய காவல் ஆய்வாளர் சத்தியமூர்த்தி மற்றும் வனத்துறையினர் உள்ளடங்கிய கூட்டுப் படையினர் நேற்று (ஜூன் 9) பழனி தாலுகா காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மலைவாழ் கிராமங்களான புரியம்பட்டி, பொருத்தல், சண்முகம்பாறை, கணவாய்மேடு ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மதுவிலக்கு தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அப்போது, சட்டவிரோத செயல்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் தயக்கமின்றி தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, இப்பகுதிகளில் உள்ள மலைப் பள்ளத்தாக்குகள், நீரோடைப் பகுதிகள் மற்றும் கரும்புத் தோட்டங்கள் ஆகிய இடங்களில் கள்ளச்சாராய ஊரல்கள் ஏதேனும் போடப்பட்டுள்ளதா என்றும், கஞ்சா செடிகள் வளர்க்கப்படுகிறதா என்றும் அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த கூட்டுத் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் நடமாட்டம் எங்கு, யாரால், எப்படி செயல்படுகிறது என்கிற முழு விபரமும் காவல்துறையினருக்கு நன்கு தெரிந்திருந்தும், நாங்களும் வேலை செய்கிறோம் என்பதை உயர் அதிகாரிகளுக்கு காட்டிக்கொள்ளவே இதுபோன்ற தேடுதல் வேட்டை நாடகம் நடத்துகின்றனர் என அப்பகுதினர் புலம்புகின்றனர்.



































































































