மடத்துக்குளம் அருகே வேடபட்டி பிரிவில் காரும், இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட கோர விபத்தில், இரண்டு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையுடன் சென்று படுகாயமடைந்த தம்பதியினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் கணியூர், அமனலிங்கம் பிள்ளை வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27) இவர் கழுகரையில் உள்ள சி.எம்.எஸ் (CMS) கேஸ் பங்க் நிறுவனத்தில் கணக்காளராக (Cash Officer) பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சௌந்தர்யா (21). இந்த தம்பதியினருக்கு சாகித்யன் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது.
சம்பவம் நடந்த 07.06.26 இரவு 8.00 மணியளவில், கார்த்திக் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் (TN 66 AS 2378) கணியூரிலிருந்து வேடப்பட்டி வழியாக திண்டுக்கல் கோயம்புத்தூர் பைபாஸ் சாலை அருகே வந்துள்ளார்.
அப்போது அதிவேகமாக வந்த கார் (TN 68 A 3890), எதிர்பாராதவிதமாக இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியுள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் இருந்த மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்துள்ளனர். இதில், 2 வயது குழந்தை சாகித்யனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையை அருகில் உள்ளவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை சாகித்யன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் கார்த்திக் அவரது மனைவி செளந்தர்யா ஆகிய இருவருக்கும் கை, கால்கள், தலை , வலது தோள்பட்டை ஆகிய இடங்களில் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த தம்பதியினர் இருவரும் உடுமலை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மடத்துக்குளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



































































































