ராக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘சிங்காரம்’ திரைப்படத்தை இயக்குநர் கே.வி. கதிர்வேலு இயக்கியுள்ளார். ஏ.எஸ். ரமண பாலாஜி மற்றும் பத்மாவதி காந்தி தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், தற்போது இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு டிரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 30 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நரிக்குறவர் சமூகத்தின் வாழ்வியல், வரலாற்றுப் பின்னணி, சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்புகள் மற்றும் உரிமைக்கான குரல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ‘சிங்காரம்’ உருவாகியுள்ளது. நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அரசியலில் ஈடுபட்டு சட்டமன்ற உறுப்பினராக உயர்வதை மையமாகக் கொண்டுள்ள இப்படம், சமூக விழிப்புணர்வுடன் நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளையும் இணைத்துப் பேசுகிறது.

விழாவில் இயக்குநர், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் படத்தின் உருவாக்க அனுபவங்களையும், அதன் பின்னணியையும் பகிர்ந்துகொண்டனர்.
இயக்குநர் கே.வி. கதிர்வேலு பேசுகையில், நரிக்குறவர் சமூகத்தினரின் வரலாறு மற்றும் பின்னணியை அறிந்துகொள்வதற்காக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார். சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், அதிகாரம் கொண்டவர்களுக்கு அளிக்கப்படும் மரியாதை, மற்றவர்கள் புறக்கணிக்கப்படுவது போன்ற பிரச்சினைகளையும் இப்படம் பேசுவதாகக் குறிப்பிட்டார். நரிக்குறவர் சமூகத்தின் வரலாற்றுடன் அரசியல் சார்ந்த அம்சங்களும் இடம்பெற்றுள்ளதாகவும், சமூகக் கருத்துகளுடன் குடும்பத்துடன் இணைந்து ரசிக்கக்கூடிய படமாக ‘சிங்காரம்’ உருவாகியுள்ளதாகவும் கூறி, அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நடிகர் யோகி பாபு பேசுகையில், இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் கே.வி. கதிர்வேலு, ரமண பாலாஜி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார். மறைந்த நடிகர்கள் மனோபாலா மற்றும் மாரிமுத்து ஆகியோரை நினைவுகூர்ந்த அவர், மனோபாலா தனக்கு எப்போதும் ஆதரவாக இருந்தவர் என்று குறிப்பிட்டார். தன்னை நம்பி வாய்ப்பளித்த படக்குழுவினரின் ஊக்கமும் நம்பிக்கையும் முக்கியமானவை என்று தெரிவித்ததுடன், வரும் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் ‘சிங்காரம்’ திரைப்படத்தைத் திரையரங்குகளில் பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

தயாரிப்பாளர் ஏ.எஸ். ரமண பாலாஜி பேசுகையில், நடனக் கலைஞராகவும் நடன இயக்குநராகவும் 27 ஆண்டுகளாகத் திரைத்துறையில் பயணித்து வருவதாகக் குறிப்பிட்டார். அந்தப் பயணத்தில் தனக்குத் துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், பலரது உழைப்பும் ஒத்துழைப்பும்தான் ராக் புரொடக்ஷன்ஸ் வளர்ச்சிக்குக் காரணம் என்றார். ஒரு படைப்பின் நோக்கம் மிகவும் முக்கியமானது என்றும், கலைஞர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஒரு படைப்பு பார்வையாளர்களின் மனநிலையை மாற்றி, அவர்களின் வாழ்க்கைப் பயணத்திற்கு ஊக்கமளிக்கக்கூடும் என்று குறிப்பிட்டார். பல சவால்களைக் கடந்து ‘சிங்காரம்’ உருவாகியுள்ளதாகவும், இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது என்றும் தெரிவித்தார். குறிப்பாக, யோகி பாபு பல தருணங்களில் தமக்கு ஆதரவாக இருந்ததாகக் கூறி, இப்படத்தின் வெற்றியில் முழு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.

திவாகர் தனது நன்றி உரையில், இப்படம் உருவாகக் காரணமாக இருந்த மாமா கார்த்திகேயன், குடும்பத்தினர் மற்றும் இயக்குநர் கே.வி. கதிர்வேலு உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார். தயாரிப்பாளர் ரமண பாலாஜி அளித்த ஊக்கமும் ஆதரவும் இப்படத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்ததாகக் குறிப்பிட்டார். மறைந்த நடிகர்கள் மாரிமுத்து, மனோபாலா ஆகியோர் படப்பிடிப்பின்போது வழங்கிய ஆலோசனைகளையும் ஆதரவையும் நினைவுகூர்ந்தார். நடிகர் எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட கலைஞர்களின் அர்ப்பணிப்பையும், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ். குமார், படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் உழைப்பையும் பாராட்டினார். யோகி பாபு இப்படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் உறுதுணையாக இருந்ததாகக் கூறி, பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் படத்தின் வெற்றிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.




































































































