மோனிகா செலினா தயாரிப்பில், சதா நாடார், மோனிகா செலினா, சுந்தரம், பேபி ஷிவ், பாண்டி உள்ளிட்டோர் நடிப்பில், சதா நாடார் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “E 1”.
கதைப்படி.. ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில், மோனிகா செலினா கணவர் மற்றும் கை குழந்தையுடன் வசித்து வருகிறார். கணவர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் குழந்தையுடன் தனியாக இருக்கிறார். அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. பார்த்தால் முகமூடி அணிந்த மர்மநபர் ஒருவர் கையில் கத்தியுடன் நிற்கிறார். அருகே இறந்த நபரின் சடலம் கிடக்கிறது. பயத்துடனும், அதிர்ச்சியுடனும் அஞ்சி நடுங்குகிறார் மோனிகா செலினா. குழந்தையை ஒன்றும் செய்துவிடாதீர்கள் என கெஞ்சுகிறார். இதற்கிடையில் மர்மநபரும் பதட்டத்துடன் அவ்வப்போது போனில் பேசுகிறார்.

மர்மநபர் யார் ? எதற்காக அந்த வீட்டிற்குள் நுழைந்தார் ? இறந்துபோன நபர் யார் ? மோனிகா செலினாவுக்கும் இந்த சம்பவத்துக்கும் என்ன சம்பந்தம் என்பது மீதிக்கதை..
இன்றைய சூழ்நிலையில் சமூகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், சஸ்பென்ஸ், த்ரில்லருடன் திரைக்கதை அமைத்து, எளிய நடையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

சதா நாடார் கொலைகாரனாக தோன்றி அச்சத்தை ஏற்படுத்தி வில்லன் போல் காட்சியளித்தாலும், அதற்கான காரணத்தை விவரித்து தனது உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி நாயகனாகிறார். அதேபோல் மோனிகா செலினா தனது கதாப்பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
படத்தில் ஒவ்வொரு காட்சிகள் நகரும் போதும் இசையமைப்பாளரின் பின்னனி இசை சிறப்பு.


































































































