நேனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், அமர் ராமச்சந்திரன், நேஹா, பாலா சிங் உள்ளிட்டோர் நடிப்பில், அபிலாஷ் ஜீ தேவ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “தாய் நிலம்”.
கதைப்படி.. இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது, தமிழர்கள் தங்கள் குடும்பத்தினர், உற்றார், உறவினர்களை இழந்து பரிதவித்து பல்வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்தனர். அந்த சமயத்தில் அமர் ராமச்சந்திரன் தனது மனைவியை இழந்ததால், தனது பத்து வயது மகளுடன் கள்ளத்தனமாக தோணியில் தமிழகம் வருகிறார். மனைவியின் தங்கை வீட்டில் மகளை விட்டுவிட்டு, போர் முடிந்ததும் அழைத்துச் செல்லலாம் என அங்கு செல்கிறார். அங்கே அரங்கேறிய அவமானங்களால் அங்கிருந்து கிளம்புகிறார். பின்னர் தென்காசி பக்கத்தில் உள்ள கிராமத்தில் சாலையோரம் உள்ள பேருந்து நிறுத்தத்தில், மகளை நினைத்து ஒருவித பரிதவிப்போடு தங்குகிறார்கள்.

மறுநாள் காலையில் அருகே பெட்டிக்கடை நடத்தும் பாலா சிங் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் விசாரித்துவிட்டு அங்கேயே தங்க உதவுகிறார்கள். கையில் இருந்த பணம் காலியாகும் தருணத்தில் ஏதாவது வேலை செய்ய வேண்டும் என கிளம்புகிறார், இலங்கை தமிழர் என்பதால் உதவ மறுக்கிறார்கள். தன் மகள் அங்கே நன்றாக படித்தவள். அவள் வயது குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதைப் பார்த்து ஏங்குகிறாள். எப்படியாவது அவளைப் படிக்க வைக்க வேண்டும் என பாலா சிங்கிடம் கண்கலங்கி கூறுகிறார்.
புலம்பெயர்ந்து வந்தவருக்கு வேலை கிடைத்ததா ? தன் மகளை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்கிற ஆசை நிறைவேறியதா ? அதன்பிறகு என்னானது என்பது மீதிக்கதை…

புலம்பெயர் தமிழர்களின் வேதனை கலந்த வாழ்வியலை தத்ரூபமாக காட்சிப்படுத்தியதோடு, கண்கலங்க வைத்துள்ளார் இயக்குநர். தகப்பன் தன் மகளை திக்கு, திசை தெரியாத ஊரில் வளர்த்தெடுக்க எவ்வளவு கஷ்டம் என்பதை எளிமையாகவும், நேர்த்தியாகவும் பதிவுசெய்த இயக்குநருக்கு பாராட்டுக்கள்.
அதேபோல் அமர் ராமச்சந்திரன், நேஹா இருவரும் தத்ரூபமாக அந்தந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். பாலா சிங் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.


































































































