வேலாயுதம் தயாரிப்பில், அபர்ணதி, லிங்கேஷ், வெற்றிச் செழியன், சுரேஷ் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில், வெற்றிச் செழியன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “தி கிராண்ட் மாஸ்டர்”.
கதைப்படி.. சென்னையில் தூய்மை பணியாளராக பணிபுரியும் வெள்ளையம்மாள் ( அபர்ணதி ) தனது மகனை நன்றாக படிக்க வைத்து வழக்கறிஞராக உருவாக்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் தனது மகன் படிப்பில் ஆர்வம் காட்டாமல், செஸ் விளையாட்டில் ஆர்வமாக இருக்கிறான். பள்ளியிலும் இவன் குப்பை அள்ளும் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால், ஆசிரியர் இவனை கீழ்த்தரமாகவே நடத்துகிறார். செஸ் விளையாடவும் அனுமதிக்க மறுக்கிறார். தனக்கு நடந்த அநீதியை நினைத்து நினைத்து வருந்துகிறான். இந்நிலையில் பள்ளிக்குச் செல்லாமல் ஊர் சுற்றும் மகன் மீது ஆத்திரமடைந்த வெள்ளையம்மாள் அவனை கண்டிக்கிறார். அவனோ வீட்டைவிட்டு தலைமறைவாகிறான்.

பின்னர் மகனின் விருப்பத்தை அறிந்து, செஸ் விளையாட பயிற்சி வகுப்பில் சேர்க்க முற்படுகிறார். ஆனால் யாரும் சேர்க்க மறுக்கிறார்கள். தாழ்ந்த சமூகத்தில் பிறந்ததால், புறக்கணிப்பவர்கள் மத்தியில், செஸ் விளையாட்டில் கிராண்ட் மாஸ்டராக்கி தன் மகனை தலைநிமிர வைக்க வேண்டும் என அவரே அவனுக்கு பயிற்சி அளிக்க முற்படுகிறார்.
தூய்மை பணியாளராக பணிபுரியும் வெள்ளையம்மாளுக்கும், செஸ் விளையாட்டிற்கும் என்ன சம்பந்தம் ? மகன் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றானா ? இல்லையா ? என்பது மீதிக்கதை…

சாதிய அடக்குமுறை, எளியவர்களுக்கு எதிராக வலியவர்களின் ஆதிக்கம், ஏற்றத்தாழ்வு மனப்பான்மை மாணவர்கள் மத்தியில் எவ்வாறு பாதிப்பை உருவாக்கும் என்பதை எதார்த்தமாக பதிவு செய்ததோடு, தற்போதைய சூழ்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் எந்த கிராமத்திலும் இல்லாததை, சாதிய அடக்குமுறை சம்பவங்களாக பதிவு செய்துள்ளார். மனித கழிவை மனிதனே அள்ளும் அவலம் நீங்கி எவ்வளவோ காலங்கள் கடந்தாலும், சாதிய வன்மத்தோடு திரைக்கதை அமைத்திருக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுகிறது.
மற்றபடி படத்தில் நடித்துள்ள அபர்ணதி, லிங்கேஷ், வெற்றிச் செழியன், சுரேஷ் மேனன், சிறுவன் உள்ளிட்டோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது.


































































































