ஆர் எஸ் இன்ஃபோடைன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரிப்பில், சூரி, மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், மிதுன் ஜெய்சங்கர், ரவீந்திரவிஜய், பாலசரவணன், ஸ்டன்ட் சிவா, ராம்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில், மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “மண்டாடி”.
கதைப்படி.. இராமநாதபுரம் மாவட்டம் முகவைபட்டினம் மீனவ கிராமத்தில் மாரி ( மிதுன் ஜெய்சங்கர் ) சாட்டப்புலி ( சுஹாஸ் ) என்பவரையும் அவரது மகனையும் கொலைவெறியோடு தாக்குகிறான். ஆனால் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட அமளியால் சாட்டப்புலி தப்பிவிடுகிறான். படகுப் போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள சாட்டப்புலி, ஊரில் செல்வாக்கு மிக்க நபர் என்பதால் மாரியை பழிதீர்க்க முற்படுகிறான். உயிருக்கு பயந்து சென்னைக்கு ஓடிப்போய், தீம் பார்க்கில் வேலை செய்யும் முத்துக்காளியிடம் ( சூரி ) உதவி கேட்கிறான் மாரி.

மாரிக்கு உதவுவதற்காக இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஊரைவிட்டு வந்த காளி மீண்டும் ஊர் திரும்புகிறார். ஊர் பஞ்சாயத்தில் பாரம்பரியமாக நடைபெறும் படகுப் போட்டியை நடத்துவது, தோற்றவர் மீண்டும் படகுஓட்ட ( மண்டாடி ) கூடாது என சாட்டப்புலி கூற பஞ்சாயத்தும் அதனையை தீர்மானிக்கிறது. போட்டி நடைபெறுவதற்கான காலம் குறைவாக உள்ள நிலையில், முத்துக்காளி மாரியின் அணியை உருவாக்கி கட்டமைக்க முயற்சிக்கிறார். அதன் பிறகு என்னானது என்பது மீதிக்கதை..

இராமநாதபுரம் மாவட்டத்தில் பாரம்பரியமாக மீனவர்கள் நடத்தும் படகுப் போட்டியை மக்களுக்கு எளிதில் புரியும் வகையில், நேர்த்தியாகவும், விருவிருப்பாகவும் அச்சு அசலாக கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் இயக்குனர்.

அதேபோல் நாயகன் சூரி இதுவரை யாரும் நடித்திராத கதாப்பாத்திரத்தை தேர்வுசெய்து, தனது கடுமையான உழைப்பால் தன்னை ஒரு மாஸ் ஹீரோவாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். சண்டை காட்சிகளிலும், கடலிலும் கடுமையான உழைப்பைச் செலுத்தியிருக்கிறார். படம் முழுவதும் சிரிக்காமல் சீரியஸான முகபாவனையுடன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக மகிமா நம்பியாரின் காலில் விழுந்து வசனங்கள் பேசி அழும்போது, பார்வையாளர்கள் கண்களில் தானாகவே கண்ணீர் வரும் அளவுக்கு எமோஷனலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

வில்லனாக நடித்துள்ள சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ், மிதுன் ஜெய்சங்கர், கிருத்திகா பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கதையின் முக்கிய கதாப்பாத்திரத்திரங்களாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதேபோல் படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

































































































