வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர், காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் ‘வதந்தி சீசன் 2 : த மிஸ்டரி ஆஃப் மணி’ எனும் எட்டு அத்தியாயங்கள் கொண்ட இன்வஸ்டிகேட்டட் கிரைம் திரில்லர் ஜானரிலான இணைய தொடரில் சுந்தரேசன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, ரசிகர்களை தனித்துவமான நடிப்பால் மிரள வைத்திருக்கிறார் புதுமுக நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி.
மேலும் அர்ஜூன் சக்கரவர்த்தி பேசுகையில், சின்ன வயதில் இருந்தே டிவியில் ஒரு படம் ஓடினால்.. அது தொடர்பான சம்பவங்களை அப்பா சொல்வார். சில நேரங்களில் ஒவ்வொரு காட்சியைப் பற்றி சொல்லும்போது… அந்த காட்சி படமாக்கப்பட்ட போது நடைபெற்ற சம்பவங்களை சுவாரசியமாக விவரிப்பார். அதை கேட்டு கேட்டு படப்பிடிப்பு தளத்தில் படக் குழுவினருடன் பழக வேண்டும்… திரை துறையில் பணியாற்ற வேண்டும்… என்ற ஆசை எழுந்தது. அத்துடன் விடுமுறை நாட்களில் அப்பா பணியாற்றும் படங்களுக்கான படப்பிடிப்பில் கலந்து கொள்வேன். அங்கு நடக்கும் நிகழ்வுகளை பார்த்துக் கொண்டே இருப்பேன். அப்போதுதான் நான் திரையில் பார்த்தது வேறு. நிஜத்தில் பார்ப்பது வேறாக இருந்தது. கேமராமேன், லைட் மேன், புரொடக்ஷன் என ஒவ்வொருவரும் தங்களுடைய கடுமையான உழைப்பை அளித்துக் கொண்டிருந்தனர்.
இதற்காகவே விடுமுறை எப்போது வரும் என்று காத்திருப்பேன். ஏனென்றால் பள்ளிக்கு செல்லும் போது படப்பிடிப்புக்கு செல்ல முடியாது. இது அப்பாவின் கடுமையான உத்தரவு. அதன் பிறகு 12 வது படிப்பு முடித்தவுடன் அப்பாவிடம் ‘விஸ்காம் படிக்கிறேன்’ என்று சொன்னேன். ‘அது வேண்டாம் உனக்கு பொருத்தமாக இருக்காது. நீ சட்டம் படி’ என்றார். அதற்காக தற்போது நான் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வருகிறேன்.
நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாக நிறைய கம்பெனிகளில் ஆடிசனுக்கு சென்றேன். அதன் பிறகு கூத்துப் பட்டறைக்கு சென்று நடிப்பு பயிற்சியை பயின்றேன். சினிமா சண்டை பயிற்சி இயக்குநரான டேஞ்சர் மணியிடம் சண்டைக் காட்சிகளுக்காக பயிற்சி பெற்றேன்.

என்னுடைய உருவத்தை வைத்தும், நிறத்தை வைத்தும், நிறைய பேர் கேலி செய்தனர் ‘கருப்பா இருக்கியே, உன் மூஞ்சியெல்லாம் கேமராவுல தெரியுமா..? ‘என பேசினர். இதனால் என் மனதிற்குள் ஏன் நம்மால் நடிக்க முடியாதா? நான் நடிகனாகக் கூடாதா? என்ற வெறித்தனமான எண்ணம் ஏற்பட்டது. முதலில் நடிகனாவதற்கான தகுதி என்னவோ, அதை வளர்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்தேன்.
நடிகர்களுக்கு உடல் ஆரோக்கியம் தான் முக்கியம் என்பதால் சத்தான உணவுகளை சாப்பிடத் தொடங்கினேன். ஜிம்முக்கு சென்றேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மேடை நாடகங்களிலும் நடித்தேன். சினிமா சம்பந்தமான ஒர்க்ஷாப் நடந்தால்… அதில் கலந்து கொள்வேன். மைம் என்ற கலையையும் கற்று வருகிறேன். சண்டைக் காட்சிகளை நடிப்பது தொடர்பான பயிற்சியையும் பெற்று வருகிறேன். நடனமும் கற்று வருகிறேன்.
ஆக்சன் ஹீரோ என்பதை விட நல்ல நடிகர் என்ற அடையாளத்தை பெறுவதைத்தான் விரும்புகிறேன். உதாரணத்திற்கு பசுபதி அவர்கள்.. எல்லா கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடிப்பார். இந்த கேரக்டர் என்று எந்த வரையறையும் இல்லை. எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் பொருந்தி என் சிறந்த நடிப்பை வழங்குவேன். எல்லோருக்கும் என்னை பிடிக்க வேண்டும் இதுதான் என் ஆசை. இதற்காக கடுமையாக உழைக்கவும் தயாராக இருக்கிறேன்.
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் அப்பா பணியாற்றுவதால், கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒருமுறை அலுவலகத்தில் இருந்தபோது புஷ்கர், காயத்ரி அவர்கள் என்னை பார்த்தார்கள். என் தந்தையிடம், ‘நன்றாக இருக்கிறானே..! ஆடிசன் வைக்கலாமா? அனுப்புவீர்களா?’ என கேட்டனர். அதன் பிறகு எனக்கு ஆடிசன் டெஸ்ட் வைத்தனர். முதலில் புஷ்கர், காயத்ரி மேடம் வைத்த டெஸ்டில் பாஸ் செய்தேன். அதன் பிறகு இயக்குநர் ஆண்ட்ரூஸ் லூயிஸ் ஆடிஷன் வைத்தார். அப்போது இயக்குநர், ‘எந்த சீன் கொடுத்தாலும் நடிப்பியாப்பா?’ என கேட்டார். ‘வதந்தி சீசன் 1 சூப்பர் ஹிட் சார். அந்த சூப்பர் ஹிட்டான தொடரின் இரண்டாவது சீசனில் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்றாலே, அதை விட்டு விட மனமில்லை என்று சொன்னேன். அதன் பிறகு செலக்ட் ஆனேன். இதில் சுந்தரேசன் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன் என்றார்.

































































































