ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி பேசுகையில், இந்த படத்தை தயாரித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடுகின்றனர். இயக்குநர் ராஜா, ஹீரோ ரிஷிகாந்த் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். ராஜா கதை சொன்ன உடனே மிகவும் பிடித்து விட்டது. ஹவுஸ் ஃபுல்லாக எல்லா திரையரங்குகளிலும் ஓடிக்கொண்டு இருக்கிறது. மற்ற மொழிகளிலும் இந்த படத்தை எடுத்துச் செல்லும் எண்ணம் இருக்கிறது. ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’ படங்களை தொடர்ந்து தமிழில் இது எங்களுக்கு மூன்றாவது வெற்றி படம். இதோடு ‘இருமுடி கட்டு’ படத்தையும் வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகர் அப்துல் லீ பேசுகையில், வாய்ப்பு கொடுத்த தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி. இந்த படத்தில் நடித்த நடிகர்களையும் தொழில்நுட்ப குழுவினரையும் அடுத்த நிலைக்கு இந்த படம் எடுத்து சென்றுள்ளது. பல வருட உழைப்பிற்கு பிறகு என்னுடைய முகமும் இந்த படத்தின் போஸ்டரில் வந்திருப்பது நெகிழ்ச்சியாக உள்ளது. படத்தை வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி என்றார்.
இசையமைப்பாளர் பரத் சங்கர், என்னுடைய இசை பயணத்தில் இந்த திரைப்படம் முக்கியமான மைல்கல். சின்ன படம், பெரிய படம் என்று கிடையாது. நல்ல படம், சுமாரான படம் என்று வேண்டுமானால் பிரிக்கலாம். ஓடக்கூடிய படத்தின் இயக்குநராக இருக்க வேண்டும் என்று ராஜா அடிக்கடி சொல்வார். அவருக்கு வாழ்த்துக்கள். இந்த படத்தை தயாரிக்க முன்வந்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி என்றார்.

நடிகர் சேத்தன் பேசுகையில், புதிய திறமையானவர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுத்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. இதை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இயக்குநர் ராஜாவுக்கும் நன்றி. படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் ரொம்பவே என்ஜாய் செய்து நடித்தோம். இந்தப் படத்தில் இருந்து பல சூப்பர் ஸ்டார்களும், லேடி சூப்பர் ஸ்டார்களும் உருவாக இருக்கிறார்கள். ரிஷியை திரையில் பார்க்கும்பொழுது இளவயது அமிதாப்பச்சனை பார்ப்பது போல இருந்தது. ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றார்.

இயக்குநர் ராஜா கருப்பசாமி பேசுகையில், என் கதையை நம்பி வாய்ப்பளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும், ஒளிப்பதிவாளர் தினேஷ் கருப்புசாமி அண்ணனுக்கும், என் படக்குழுவினருக்கும் நன்றி. அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல் என்பது மகிழ்ச்சி. அனிஷ்மா திறமையான நடிகை. ஆறு வருடத்திற்கு முன்னால் இந்த கதையை எடுத்துக்கொண்டு அலைந்த போது எல்லோரும் சொன்ன ஒரே வார்த்தை ரிஷிகாந்தை மாற்ற வேண்டும் என்பதுதான். ஆனால், இப்போது தமிழ் சினிமாவிற்கு ஐடியாலஜியோடும் சமூகப் பொறுப்போடும் ஒரு ஹீரோ கிடைத்துவிட்டார். என் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் நன்றி என்றார்.
நடிகர் பகவதி பெருமாள் பேசுகையில், சினிமாவில் 100 பேர் ஜெயித்தால் லட்சம் பேர் காணாமல் போகிறார்கள். இது போன்ற நல்ல படங்கள் வெளியாகி வெற்றி பெற தயாரிப்பாளர்கள்தான் முக்கிய காரணம். அந்த வகையில், இந்த கதையை தேர்ந்தெடுத்து தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. பலருடைய வாழ்க்கையில் இந்த படம் ஒளி ஏற்றி இருக்கிறது. சின்ன பட்ஜெட்டில் படம் செய்பவர்களுக்கு தான் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அதை உணர்ந்து இப்போது பல படங்கள் வெளியாகிறது என்றார்.

நடிகர் ரிஷிகாந்த் பேசுகையில், உங்கள் வீட்டு பையனாக நினைத்து எனக்கும் இந்த படத்திற்கு ஆதரவு தந்த ரசிகர்களுக்கு நன்றி. ஆறு வருடங்களாக இந்த படத்தை நானும் தம்பி ராஜாவும் சுமந்து கொண்டிருந்தோம். எங்களை நம்பி வாய்ப்பளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. குடும்பத்தோடு அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து பார்த்து சிரித்து மகிழும்படியான ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம். அது இன்று நடந்திருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றார்.

































































































