செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ, ரவுடி பிக்சர்ஸ் & ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில், லலித் குமார், விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் உமேஷ் குமார் தயாரிப்பில், நயன்தாரா, கவின், ராதிகா சரத்குமார், பாக்கியராஜ், பிரபு, சத்யன் உள்ளிட்டோர் நடிப்பில், விஷ்ணு எடவன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ஹாய்” ( Hi ).
கதைப்படி.. கோவையில் பெற்றோருடன் ( பாக்கியராஜ், ராதிகா சரத்குமார் ) வசித்துவரும் மயில்சாமி ( கவின் ) தன்னை எந்தப் பெண்ணும் காதலிக்க விரும்பவில்லை என, தொடர் காதல் தோல்வியால் விரக்தியின் உச்சத்திற்கு செல்கிறார். பெற்றோர் திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார்கள். காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்பது மயில்சாமியின் விருப்பம் என்பதால், வீட்டைவிட்டு சென்னைக்கு தப்பிச் செல்கிறார்.

இதேபோல் மனைவி தன்னை விட்டுச் சென்றதால் விரக்தியில் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி கடன்காரனான இந்திரன் ( பிரபு ) தன் மகள் தேவயானிக்கு ( நயன்தாரா ) கட்டாய திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார். இந்த திருமணம் தனக்கு பிடிக்காததால் அங்கிருந்து தப்பித்து சென்னைக்கு செல்கிறார்.

வெவ்வேறு காலகட்டங்களில் சென்னை வந்த இருவரும் தற்செயலாக சந்திக்கின்றனர். இருவரும் நண்பர்களாக பழகுகின்றனர். மயில்சாமி, தேவயானியை ஒருதலைப்பட்சமாக காதலிக்கிறார். ஒருகட்டத்தில் இருவரது பெற்றோரும் இவர்களைத் தேடி சென்னைக்கு வருகின்றனர். அப்போது நடைபெறும் வாக்குவாதத்தில், தேவயானியை காதலிப்பதாகவும் அவள் மூன்று மாதம் கர்ப்பம் எனவும் சொல்கிறார். அனைவரும் அதிர்ச்சியில் ( தேவயானி உள்பட ) உறைந்து போகின்றனர். பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகிறது. தேவயானி வெளிநாடு செல்ல விரும்புகிறார்.

மயில்சாமி தேவயானியிடம் தனது காதலை சொன்னாரா ? இல்லையா ? இவர்களது பெற்றோருக்கு உண்மை தெரிந்ததா ? இவர்களுக்கு திருமணம் நடந்ததா ? இல்லையா ? என்பது மீதிக்கதை…
நயன்தாராவுக்கு கவின் பொருத்தமான ஜோடி இல்லை என்றாலும், அதற்கு ஏற்றார்போல நகைச்சுவையுடன் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை நயன்தாரா ஒவ்வொரு ஃப்ரேமிலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி, படம் முழுவதையும் அவரே சுமந்து செல்கிறார்.
தொடர் தோல்விகளால் துவண்டு போய் இருந்த கவினுக்கு, நயன்தாரா மூலம் ரீ எண்ட்ரி கிடைத்திருக்கிறது. அவரும் ஓரளவுக்கு முயற்சி செய்துள்ளார்.

பாக்கியராஜ், ராதிகா சரத்குமார், பிரபு ஆகியோரின் நடிப்பும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். பாடல்கள் மற்றும் ஒளிப்பதிவு ரசிக்கும்படியாக இருக்கிறது.

































































































