மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர், சோனா ஒலிக்கல், டிராவிட் செல்வம், தேவதர்ஷினி, அனுஷா பிரபு உள்ளிட்டோர் நடிப்பில், விக்னேஷ் ஶ்ரீகாந்த் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ஒன்ஸ்மோர்”.
கதைப்படி.. காதல் தோல்வியால் மன அழுத்தத்திற்கு ஆளாகி மருத்துவர் லாவண்யாவிடம் ( தேவதர்ஷினி ) கவுன்சிலிங் பெற்று வருகிறார் ரகுவரன் ( அர்ஜுன் தாஸ் ). சென்னையில் தனது அக்கா வீட்டில் தங்கி சிவில் இன்ஜினியரிங் வேலை செய்து கொண்டு இருக்கிறார். அப்போது ஒருநாள் தனது பைக் ரிப்பேர் ஆனதால், பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறார். அந்த சமயத்தில் ஒரு காரில் வந்த பெண் இவரிடம் அறிமுகமாகி, அவரே ரகுவரனை அழைத்துச் செல்கிறார். அவர் இவரது கல்லூரியில் படித்த ஜூனியர் அஞ்சலி ( அதிதி சங்கர் ). படிக்கும்போதே ரகுவரன் மீது காதல் இருந்ததாகவும், என்றாவது ஒருநாள் சந்திக்கும் போது சொல்லலாம் என இருந்ததாகவும், அந்த வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது என்று தனது காதலை ரகுவரனிடம் கூறுகிறார். இவர் இருக்கும் மனநிலையில் அஞ்சலியின் காதலை ஏற்க மறுக்கிறார்.

ஆனாலும் விடாமல் பலநாட்கள் ரகுவரனை தொடந்து அன்புத் தொல்லை கொடுப்பதோடு, உறவினர்கள் சம்பவத்தையும் பெறுகிறார். ஒரு கட்டத்தில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய நிட்சயதார்த்தம் நடைறுகிறது. அந்த சமயத்தில் முன்னாள் காதலி இந்திரா ( சோனா ஒலிக்கல் ) ஃபோன் செய்து அவசரமாக பார்க்க வேண்டும் என்கிறார்.
முன்னாள் காதலி எதற்காக இவரை சந்திக்க விரும்புகிறார் ? அந்த காதல் ஏன் முறிந்தது ? அஞ்சலி திருமணம் நடந்ததா ? இல்லையா ? என்பது மீதிக்கதை..

படத்தின் முதல் பாதியில் கடுகடுவென கோபக்காரனாகவும், இரண்டாம் பாதியில் களகளப்பான கல்லூரி மாணவராகவும் இருவேறு பரிணாமத்தில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் அர்ஜூன் தாஸ். இதுவரை வில்லனாக பார்த்த பார்வையாளர்களுக்கு, இந்தப் படத்தின் மூலம் காதல் நாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் என்றே சொல்லலாம். காதலியின் பிறந்தநாள் நிகழ்வில் அமைதி, எமோஷனல் என அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இரண்டாம் பாதியில் காதல், ஏக்கம், சந்தோஷம் என ஜாலியாக அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

அதேபோல் அதிதி சங்கர் தனது கதாப்பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, துறுதுறு பெண்ணாக களகளப்பாக வந்து செல்கிறார். அவருக்கு இந்தப் படம் பெயர் சொல்லக்கூடிய படமாக பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை. கல்லூரி காதலியாக சோனா ஒலிக்கல் தோன்றும் காட்சிகள் குறைவு என்றாலும், அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்.
பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. ஒளிப்பதிவு, இசை சிறப்பு. மொத்தத்தில் பார்வையாளர்களின் கல்லூரி நினைவுகளை ஞாபகப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

































































































