திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கொல்லப்பட்டி சமத்துவபுரம் கணவாய் மேடு பகுதி அருகே பழனிச்சாமியின் மனைவி அஞ்சம்மாள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, அவருடன் சென்றிருந்த அவரது உறவினர்களின் குழந்தைகள் சாலையோரமாக அமர்ந்து விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக பால் கேண்களை ஏற்றி சென்ற வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் அமர்ந்திருந்த குழந்தைகள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த விபத்தில் நாகராஜனின் மகள் யோக வர்ஷினி, அனன்யா தனுஸ்ரீ, மோசிகிரன் ஆகிய நான்கு குழந்தைகளும் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்த குழந்தைகளுடன் இருந்த மூதாட்டி அஞ்சம்மாள் விபத்தின் அதிர்ச்சியில் மயக்கம் அடைந்துள்ளார். இந்த விபத்து ஏற்படுத்திய பால் வாகனம் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த நான்கு குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதை அடுத்து விபத்தை ஏற்படுத்திய பால் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததுடன் தப்பிச்செல்ல முயன்ற ஓட்டுநரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பிஞ்சு குழந்தைகள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
-கதிர்
திண்டுக்கல் செய்தியாளர்

































































































