
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்த சில நிமிடங்களிலேயே அந்த நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் குற்றம் தொடர்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு 8 பெண்கள் அளித்த புகாரின் பேரில், 13 பிரிவுகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி ராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், கெரே பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய ஒன்பது பேர் சிறையில் உள்ளனர். மூன்று முறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.
கடந்த வாரத்திலிருந்து தினசரி விசாரணை நடைபெற்று வந்தது. அரசு தரப்பு உள்ளிட்ட இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பெற்ற நிலையில், மே 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களுக்குள், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி உள்ளிட்ட மாவட்ட நீதிபதிகள் 77 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எனினும் மே 30ஆம் தேதி வரை அவர் கோவை மகளிர் நீதிமன்றத்திலேயே பணியில் இருப்பார் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.