
கோயம்புத்தூர் மாவட்டம், கோவை வடக்கு வட்டாரத்தில் உள்ள விளாங்குறிச்சி கிராமத்தில், முருகன் நகர், விநாயகபுரம், சங்கரா நகர் ஆகிய இடங்களில் வசிக்கும் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 34 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.
இது சம்பந்தமாக குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் சம்பத்குமார் கூறுகையில், கணபதி புறநகர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் 1991 ஆம் ஆண்டு நிலங்களை கைபயகப்படுத்தி, 1994 ஆம் ஆண்டு இழப்பீடு தொகையையும் நிர்ணயம் செய்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன்பிறகு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டது. மேலும் அந்த இடத்தில் எந்தவித வீட்டுவசதி திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. அந்த காலி வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்து வாங்கிய 500 பேர், உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதி பெற்று, கட்டிடங்கள் கட்டி குடியிருந்து வருகின்றனர். மேலும் மின்சார கட்டணம், தண்ணீர் வரி, சொத்துவரி உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் அரசுக்கு முறையாக செலுத்தி வருகின்றனர். இங்கு 2500 பேர் வாக்குரிமை பெற்று ஒவ்வொரு தேர்தலிலும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது இப்பகுதியில் உள்ள இடங்கள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமானது எனக்கூறி, பட்டா மாறுதல், பெயர் மாற்றம், கட்டிட அனுமதி, ஆவணப்பதிவு வரன்முறை படுத்துதல் உள்ளிட்ட அரசு பணிகள் மறுக்கப்படுகிறது. ஆகையால் இப்பகுதியில் வசித்துவரும் ஏழை எளிய நடுத்தர மக்கள் தங்களின் தேவைகளுக்காக சொத்துக்களை விற்பனை செய்யவும், கட்டிட அனுமதி பெற்று கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளோம் என்று கூறினார்.