
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி நகில் உள்ள பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி புவனேஸ்வரி மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி புவனேஸ்வரி உடுமலையில் உள்ள சமூகநல விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் தங்கி இருந்த அரசு சமூகநல விடுதியில் மதிய உணவு சாப்பிட்டுள்ளார். பின்னர் பள்ளிக்கு சென்று வகுப்பறையில் அமர்ந்த போது மயங்கி கீழே சரிந்து விழுந்துள்ளார். மயங்கி விழுந்த மாணவியை அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற போது அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மாணவி விடுதியில் இருந்து பள்ளிக்கு செல்லும் போது தனது தோழியிடம் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். மாணவி இறப்பு குறித்து உடுமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி உடல் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது.