
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்துள்ள குடிமங்கலம் அருகேயுள்ள சிக்கனூத்து கிராமத்தில், மடத்துக்குளம் அதிமுக எம்.எல்.ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி என்பவரும் அவரது இரண்டு மகன்களான தங்கபாண்டியன், மணிகண்டன் ஆகியோர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தோட்ட வேலைக்கு சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று ( 05.08.2025 ) இரவு தங்கபாண்டியன், மணிகண்டன் இருவருக்கும் கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. சண்டையைத் தடுக்கச் சென்ற தந்தை மூர்த்தியை மகன்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 100 க்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல், ஆயுதப்படை காவலர் அழகுராஜா ஆகியோர் தோட்டத்து சாலைக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு தகராறு செய்து கொண்டிருந்த தங்கபாண்டியன், மணிகண்டனை சிறப்பு உதவி ஆய்வாளர் தடுத்து நிறுத்தி, காயமடைந்த மூர்த்தியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்க்கு தகவல் சொன்னதாக கூறப்படுகிறது.

பின்னர் தங்கப்பாண்டியன் என்பவர் தங்களுடைய குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டாமென எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையே காயமடைந்த மூர்த்தியை மருத்துவமனைக்கு அனுப்புவதற்காக காத்திருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேலை வெட்டுவதற்காக ஓடிவந்த மணிகண்டனை பார்த்து சிறப்பு உதவி ஆய்வாளரும், ஆயுதப்படை காவலரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். மணிகண்டன் மற்றும் தங்கப்பாண்டி ஆகிய இருவரும் சேர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலையும் அழகுராஜாவையும் அரிவாளால் வெட்டியதில், சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஆயுதப்படை காவலர் அழகுராஜா மட்டும் தப்பித்து ஓடி விட்டதாக கூறப்படுகிறது. கொலை செய்துவிட்டு தப்பியோடிய மூர்த்தி, தங்கபாண்டியன், மணிகண்டன் ஆகியோரை பிடிக்க திருப்பூர் மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் ஆறு தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மகேந்திரன் கூறுகையில், தோட்டப் பணிகளை வேறு சிலர் கவனித்து வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்களை வேலைக்கு சேர்த்து விட்ட நபர் பற்றிய விபரங்களையும், தப்பித்து ஓடிய நபர்கள் தொடர்பான விபரங்களையும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நடந்த இச்சம்பவத்திற்கு பெரும் மனவேதனை அடைவதாக கூறிய அவர், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேல் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் 1 கோடி ரூபாய் நிதியுதவி மற்றும் அரசு வேலை வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட இடத்தில் ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் விசாரணை நடத்திய நிலையில், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் விசாரணை மேற்கொண்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட சண்முகவேலின் சடலம் பிரேத பரிசோதனை முடிந்து அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலிடம், சண்முகவேல் குடும்பத்தினர் கதறி அழுதனர். அதனைத் தொடர்ந்து உடுமலை மின் மாயனத்திற்கு சண்முகவேல் உடல் கொண்டுவரப்பட்டு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் உடுமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பையும், பதட்டமான சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய கொலையாளிகளில் இரண்டு பேர் தந்தை மூர்த்தி, மகன் தங்கபாண்டியன் திருப்பம் காவல் ஆணையர் அலுவலகத்தில் சரணடைந்துள்ளனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மூன்றுபேர் மீதும் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டிய காவல் துறையினர் உயிருக்கே பாதுகாப்பு இல்லையே ! சாமானியர்களுக்கு… ?