
ஶ்ரீ துர்கா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் V. ரவிச்சந்திரன் தயாரிப்பில், மதுமிதா, வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில் குமார், முருகேசன், மாரிக்கண்ணு, கோவை உமா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “நாளை நமதே”.
கதைப்படி.. சிவகங்கை மாவட்டம் சிவதாணுபுரம் ஊராட்சியில் ஆதிக்க சாதியினர் அதிகமாக வசித்து வருகின்றனர். இங்கு ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் காலனியும் இருக்கிறது. ஆதிக்க சாதியினர் சார்பில் விருமாண்டி குடும்பத்தினர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த ஊராட்சியை தனி தொகுதியாக மாற்றி அறிவிப்பு வெளியாகிறது. தேர்தலில் போட்டியிட ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் முன்னாள் இராணுவ வீரர் வேட்புமனு தாக்கல் செய்ய செல்லும்போது கொலை செய்யப்படுகிறார். பின்னர் ஆதிக்க சாதியினர் ஒருவரை வெட்டி ஊரில் கலவரத்தை ஏற்படுத்தி தேர்தலை நிறுத்துகின்றனர். மீண்டும் பொதுத் தொகுதியாக மாற்றப்படுகிறது.

பின்னர் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் தனி தொகுதியாக மாற்றப்படுகிறது. இம்முறை தனது வீட்டில் வேலை பார்க்கும் தாழ்த்தப்பட்டவரான பெருமாள் என்பவரை வேட்பாளர் ஆக்குகின்றனர். ஆனால் பெருமாளின் மருமகள் அமுதா அவரை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதனால் வெகுண்டெழுந்த ஆதிக்க சாதியினர் அமுதாவின் கதையை முடித்து பெருமாளை போட்டியின்றி தேர்வு செய்ய வேண்டும் என மும்முரமாக வேலை செய்கின்றனர்.
பின்னர் தேர்தல் நடந்ததா ? அமுதாவுக்கு என்னானது ? அதன்பிறகு என்ன ஆனது என்பது மீதிக்கதை..

கடந்த காலங்களில் பொதுத் தொகுதியாக இருந்த ஊராட்சிகள், தனி தொகுதியாக மாறியதால் அந்த கிராமங்களில் நடைபெற்ற சம்பவங்களை வைத்து, சினிமாவுக்காக தனது கற்பனைகளை திரைக்கதையில் புகுத்தி, ஆதிக்க ஜாதியினருக்கு எதிராக ஜாதிய வன்மத்தை தினித்திருக்கிறார் இயக்குநர். அமைதியாக இருக்கும் சமூகத்தில், பழைய கதைகளை பேசி கலவரத்தை தூண்ட நினைப்பதும் ஒருவகை வன்முறை தானே !

அமுதாவாக நடித்துள்ள மதுமிதா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது குரல்வளமும் அருமை. அதேபோல் வேல்முருகன் காமெடி கதாப்பாத்திரம் என்றாலும், சில இடங்களில் சலிப்படைய வைக்கிறார். பங்காளிகளாக நடித்துள்ள இருவர், நாயகியின் அம்மா, பெருமாள் கதாப்பாத்திரம் உள்ளிட்ட அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.