
சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிப்பில், ரஜினிகாந்த், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், அமீர்கான், உபேந்திரா, சவுபின் சாஹிர் உள்ளிட்டோர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “கூலி”.
கதைப்படி.. சென்னையில் மேன்சன் நடத்திவரும் தேவா ( ரஜினி ), தனது நண்பர் ராஜசேகர் ( சத்யராஜ் ) திடீரென மரணம் அடைந்த தகவல் அறிந்து, அவருடைய இறுதிச்சடங்கில் பங்கேற்க விசாகப்பட்டினம் செல்கிறார். அங்கு அவரின் மூத்த மகள் ப்ரீத்தி ( ஸ்ருதிஹாசன் ) தேவாவை அவமானப்படுத்தி வெளியே அனுப்புகிறார். தனது நண்பனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக விசாரிக்க தொடங்குகிறார். சில தகவல்கள் அவரை அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் சின் பின் ஏற்றுமதி நிறுவனம் 14 ஆயிரம் கூலி தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி செயல்பட்டு வருகிறது. அதன் உரிமையாளர் சைமன் ( நாகர்ஜுனா ), அவருக்கு எல்லாமுமாக செயல்படும் தயாளன் ( சவுபின் சாஹிர் ) பற்றியும் கிடைத்த தகவல்கள், தேவாவிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே, அந்த துறைமுத்திற்குள் சென்று சைமனை சந்திக்க முற்படுகிறார் தேவா.

சைமனின் தொழில்கள் மற்றும் பின்னணி ? தயாளன் யார் ? அவரது பின்னணி என்ன ? இவர்களுக்கும் ராஜசேகருக்கும் என்ன தொடர்பு ? ராஜசேகர் எதற்காக, எப்படி மரணம் அடைந்தார் ? தேவா, ராஜசேகர் நட்பு எத்தகையது ? என்பது மீதிக்கதை..
மேன்சன் ஓனராக ரஜினிகாந்த் தோன்றும் காட்சிகள் தொடங்கி அடுத்தடுத்த காட்சிகள் நகரும்போது, ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிர வைக்கும் அளவுக்கு விருவிருப்பாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். ஆனால் ரஜினியின் வழக்கமான படங்களைவிட சற்று திசைமாறிய திரைக்கதை என்றும் கூட சொல்லலாம். ரஜினி கொடுத்த அழகான வாய்ப்பை இயக்குநர் பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டார் என்றும் சொல்லலாம்.

இளைஞர்களின் இதயத்துடிப்பாக மூன்று தலைமுறைகள் தாண்டியும் எதிர்பார்க்கும் நாயகன் ரஜினியின் தோற்றமும், நடிப்பும் சிறப்பு. ஸ்ருதிஹாசன் இதுவரை நடித்திராத குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்து, எந்த கதாப்பாத்திரத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடிக்கக் கூடிய நடிகை என பெயரெடுத்துள்ளார். திரைக்கதை சற்று மிதமாக நகரும்போது, அனிருத்தின் இசை அந்த குறையை நிவர்த்தி செய்கிறது. அனிருத்தின் இசையே படத்திற்கு பக்கபலம் எனலாம்.
அமீர்கான், ரஜினி சந்திக்கும்போது சொல்லப்படும் ஃப்ளாஷ் பேக் ரசிக்க வைக்கிறது. சவுபின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.