
சென்னை புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் எழில் இனியன் தயாரிப்பில், மாஸ் ரவி, லட்சுமி பிரியா, மஞ்சு, சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, கல்லூரி வினோத், தங்கதுரை பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் நடிப்பில், மாஸ் ரவி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “காத்துவாக்குல ஒரு காதல்”.
கதைப்படி.. ஜீவாவும் ( மாஸ் ரவி ) மேகாவும் ( லட்சுமி பிரியா ) ஒருவரையொருவர் உண்மையாக நேசித்து காதலித்து வருகின்றனர். இதற்கிடையில் வடசென்னை பகுதியில் டாஸ்மாக் பார் ஏலம் உள்ளிட்ட பல்வேறு தொழில் போட்டியில் சூப்பர் சுப்பராயன், சாய் தீனா உள்ளிட்ட ரவுடிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு பலபேர் கொல்லப்படுகின்றனர். சாய் தீனா அனைத்து தாதாக்களையும் அழித்துவிட்டு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார். இந்நிலையில் காதலர் தினத்தன்று தனது காதலை சொல்ல வருவதாக கூறிய காதலன் ஜீவா வராததால் அவனோடு பழகிய இடங்களிலெல்லாம் தேடி அழைக்கிறார் மேகா.

சாய் தீனா தனது சுயநலத்திற்காக அப்பகுதி இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறார். இளைஞர்கள் கத்தியை பிடிக்காமல் படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என ஜிம் நடத்திவரும் மாஸ் போராடுகிறார். அவரை பல்லவி ( மஞ்சு ) காதலிக்கிறார். ஆனால் மாஸ் காதலுக்கு முற்றிலும் எதிரான மனநிலையில் இருந்து வருகிறார். மாஸ் தாக்குதலுக்கு உள்ளாகி ரவுடிகளை விரட்டிச் செல்கிறார். அப்போது தனது காதலன் ஜீவாவை தேடி மேகா அந்த வழியாக செல்லும் போது, மாஸ் ரவுடிகளை விரட்டி செல்வதைப் பார்த்து, தனது ஜீவா மாதிரி இருந்ததால் அவனை பின் தொடர்கிறார்.
மேகா தனது காதலன் ஜீவாவுடன் இணைந்தாரா ? மாஸ் யார் ? வடசென்னை ரவுடிகள் கலாச்சாரத்திலிருந்து மீண்டதா ? என்பது மீதிக்கதை..

காத்துவாக்குல ஒரு காதல் என படத்திற்கு பெயர் வைத்துவிட்டு, படம்முழுவதும் ரவுடிகள் கலாச்சாரத்தை புகுத்தி பார்வையாளர்களை ஏமாற்றமடைய செய்திருக்கிறார் இயக்குநர். கதாப்பாத்திர தேர்விலும் கோட்டைவிட்டாரா ? அல்லது வேண்டுமென்றே செய்தாரா என தெரியவில்லை. எல்லா கதாபாத்திரங்களும் எண்ணெய் வடிந்த முகத்துடன் ஒரே கலரில் தேர்வு செய்தால், சினிமாவிற்கான அழகியல் குறைவாகவே உள்ளது. வட சென்னையில் பெண்களைத் தவிர ஆண் கதாப்பாத்திரங்கள் அனைவரும் கருப்பு நிறம் தான் என காட்சிப்படுத்தியது ஏனோ ?