
ஶ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், மாணிக்கம் தயாரிப்பில், விக்னேஷ், மனிஷா ஜித், நாசர், ஒய்ஜி மகேந்திரன், தலைவாசல் விஜய், யோகி, அஜய் ரத்னம், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடிப்பில், ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ரெட் ஃபிளவர்”.
கதைப்படி.. உலகத்தில் பெரும்பாலான நாடுகளை ( 2047 ஆம் ஆண்டு ) மால்கம் டைனஸ்டி ( தலைவாசல் விஜய் ) தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இந்தியாவை அதிக வரி செலுத்த வேண்டும் என நிர்பந்திக்கிறார். இந்திய பிரதமர் ( ஒய்ஜி மகேந்திரன் ) மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் கொந்தளித்த மால்கம் உலக நாடுகளில் வசிக்கும் இந்திய பெண்களை கொடூரமாக கொலை செய்ய உத்தரவிடுகிறார். அதோடு இந்திய பொருளாதாரத்தை அழித்து, மக்களை அனாதைகளாக்க முக்கியமான இடங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த ஏற்பாடு செய்கிறார். இதற்கிடையில் இந்தியாவின் சீக்ரெட் ஏஜெண்டான விக்னேஷ், மால்கம் டைனஸ்டியின் திட்டங்களை முறியடிக்க முயற்சி செய்து வருகிறார்.

நாடு இக்கட்டான நிலையில் இருப்பதால், பிரதமர் முப்படை தளபதிகளை அழைத்து ஆலோசனை நடத்துகிறார். அப்போது 1947 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸ் ரெட் ஃபிளவர் ஆபரேஷன் என்கிற பெயரில் போரிட்டு, எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெற்றதால், அதே பெயரில் ஆபரேஷன் மேற்கொண்டு எதிரிகளை வீழ்த்தி நாட்டை காப்பாற்றலாம் என்கின்றனர்.
மால்கம் டைனஸ்டியின் ஆக்ரோஷத்திற்கு இந்தியா அடிபணிந்ததா ? ரெட் ஃபிளவர் ஆபரேஷன் என்னானது என்பது மீதிக்கதை..
மூன்றாம் உலகப்போர் நடந்தால் என்னவெல்லாம் நடக்கும், 2047 ஆம் ஆண்டு இந்தியா எந்த சக்தியாலும் அழிக்க முடியாத ஒரு வல்லரசு நாடாக இருக்கும் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குநர். திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரமாண்டமான ஒரு படத்தில் நடிகர் விக்னேஷ் நடித்திருக்கிறார் என்பதால் அவருக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது. இதுவரை அவர் நடித்திராத புதுவிதமான பரிணாமத்தில், இரட்டை வேடங்களில் தோன்றி தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார் என்றே சொல்லலாம். அதேபோல் நாயகி மனிஷா ஜித், ரசிகர்கள் மனங்களில் இடம்பிடிக்கும் வகையில், தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்லலாம்.