
ஜியோ ஹாட்ஸ்டார், ஜி.கே.எஸ் புரொடக்சன்ஸ், செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன், அஞ்சலி, அஜு வர்க்கீஸ், விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் நடிப்பில், ராம் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “பறந்து போ”.
கதைப்படி.. சென்னையில் சிவா, கிரேஸ் ஆண்டனி தம்பதியருக்கு எட்டு வயதில் பையன் இருக்கிறான். தாய் சேலை வியாபாரம் செய்துவருகிறார். கோவையில் நடைபெறும் கண்காட்சியில் ஸ்டால் போட்டு வியாபாரம் செய்வதற்காக கோவை செல்கிறார். பையன் மிதுன் தந்தை சிவாவுடன் இருக்கிறான். சிவா வெளியில் சென்றபோது வீட்டில் தனியாக விளையாடுகிறான். அப்போது சில பொருட்கள் உடைபடுகிறது. எண்ணெய் டின்னும் உடைந்து சிதறி கிடக்கும் நிலையில், தந்தை உள்ளே வந்ததும் சிறிது கோபப்படுகிறார். பின்னர் பையன் முகத்தில் லேசாக அரைகிறார். இதனால் பையன் கோபப்பட்டு சாப்பிடாமல் அடம்பிடிக்க, பின்னர் சமாதனமாகி தந்தையை வீட்டிற்குள் பூட்டி வைத்துவிட்டு வெளியே விளையாட செல்கிறான்.

தாய், தந்தையின் அரவணைப்பில் தூங்க வேண்டும், சந்தோசமாக வெளியே செல்ல வேண்டும் என்கிற ஆசை அவனுக்குள் இருக்கிறது. சிவா பையனை சமாதானப்படுத்தி பைக்கில் வெளியே அழைத்துச் செல்கிறார். வழியில் பைக் கடனை வசூலிக்கும் நபர் இவரைப் பார்த்து துரத்த, தப்பித்து ஓடுகிறார். இதற்கிடையில் அவ்வப்போது மனைவியிடம் அலைபேசியில் பேசுகிறார். வீட்டிற்கு சென்றால் கடன்காரன் வருவான் என நினைத்து, தனது அம்மா வீட்டிற்கு சென்று உதவி கேட்கலாம் என செல்கிறார். அப்போது பையன் சில விஷயங்களுக்காக அடம்பிடிக்கிறான்.
மகனின் ஆசையை சிவா நிரவேற்றினாரா ? கடன் பிரச்சினையிலிருந்து மீண்டு வந்தாரா என்பது மீதிக்கதை..
தந்தை கதாப்பாத்திரத்தில் சிவா அச்சு அசலாக பொருந்தியிருக்கிறார். தனக்கே உரிய வழக்கமான நையாண்டி நடிப்புகளை ஓரம் கட்டிவிட்டு, இயக்குநர் போக்கில் தன்னை ஒரு நடிகராக நிரூபித்துள்ளார்.

நடுத்தர குடும்பத்தினரின் வாழ்க்கை முறையையும், குழந்தைகளின் கனவுகளையும், பெற்றோர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை தனது அற்புதமான திரைக்கதையின் மூலம், அழகாக காட்சிப்படுத்திய விதம் சிறப்பு.
அஞ்சலியின் கதாப்பாத்திரம் ரசிக்கும்படியாக உள்ளது. ஒளிப்பதிவாளரின் பணி சிறப்பு.
படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.