
நியூ மாங்க் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், பிருதிவிராஜ் ராமலிங்கம், காளி வெங்கட், மைனா நந்தினி, ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள், வேலா ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் என். அரவிந்தன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “குட் டே”.
கதைப்படி.. திருப்பூரில் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சாந்தகுமார் ( பிருதிவிராஜ் ராமலிங்கம் ), அந்த நிறுவனத்தின் மேலாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, ஊரிலிருந்து மனைவி கூறும் குடும்ப பிரச்சினை போன்ற காரணங்களால் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு, தங்கியிருக்கும் வீட்டு ஓனரிடம் பிரச்சினை செய்து அவரது மண்டையை உடைத்துவிட்டு ஓடுகிறார். பின்னர் சாலையில் லாரி டிரைவரின் செயலால் கண்ணாடியை உடைத்து பிரச்சினை, கல்லூரியில் தன்னோடு படித்த தோழியின் வீட்டிற்கு நள்ளிரவில் சென்று தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கேக் வெட்ட சொல்லுதல், காவல் நிலையத்தில் யாரும் எதிர்பாராத நேரத்தில், ஆய்வாளரின் ஆடையில் வாக்கி டாக்கியிடன் தப்பிக்கிறார்.

போதையில் இருக்கும் ஒருவர், காவல் நிலையத்திலிருந்து தப்பிக்கும் அளவுக்கு காவல் நிலையத்தில் என்ன நடந்தது ? காவலர் உடையில், வாக்கி டாக்கியுடன் சென்ற நபர் சிக்கினாரா ? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது மீதிக்கதை…

திருப்பூரில் குடும்ப சூழலால், படித்த படிப்பிற்கு சம்பந்தம் இல்லாத வேலை பார்க்கும் எண்ணற்ற தொழிலாளர்களின் வாழ்க்கை முறையையும், காவல்துறையினரின் வேலைப்பளுவையும், ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களை திரைக்கதையாக உருவாக்கி, விடியும் அந்த நாள் ஒருவருக்கு “குட் டே” வா, “பேட் டே” வா என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
ஒரு இரவில், ஒரு மனிதன் குடித்துவிட்டு அவன் செய்யும் சிறு தவறுகள், அவனது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய கதைக்களத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி, தயாரித்தும் இருக்கிறார் பிருதிவிராஜ் ராமலிங்கம்.

ஆடுகளம் முருகதாஸ், அவரது மனைவி குழந்தையுடன் தோன்றும் காட்சிகள் ரசிக்க வைத்தாலும், சிந்திக்க வைக்கிறது. இதேபோல் பல சம்பவங்கள் தினசரி செய்தித்தாள்களில் படித்தது ஞாபகம் வருகிறது. காளி வெங்கட் தோன்றும் காட்சிகள் பெரும்பாலும் தேவையில்லாதது, அதனை குறைத்து நேரத்தை மிச்சப்படுத்தி இருக்கலாம். வேலா ராமமூர்த்தி கூறும் சம்பவம் பல குடிமகன்களை சிந்திக்க வைக்கும் என்றே சொல்லலாம்.
படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.